This Article is From Apr 19, 2020

புலம் பெயர் தொழிலாளர்களின் இடப்பெயர்வு தடுக்கப்படும்: மத்திய அரசு

தற்போது நிவாரண / தங்குமிடம் முகாம்களில் வசிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த விவரங்கள் சம்பந்தப்பட்ட உள்ளூர் அதிகார சபையில் பதிவு செய்யப்பட வேண்டும்.

புலம் பெயர் தொழிலாளர்களின் இடப்பெயர்வு தடுக்கப்படும்: மத்திய அரசு
New Delhi:

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு அமல்படுத்தியிருந்த முழு முடக்க நடவடிக்கையில் நாளை முதல் தளர்வுகள் அனுமதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தொற்று பரவலின் மையங்களாக(hotspot) கருதப்படாத பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகளுக்கு அனுமதியளிக்கப்படும். இந்த நிலையில் புலம் பெயர் தொழிலாளர்கள் மாநிலங்களுக்கிடையே புலம் பெயர்வதை தடுத்து நிறுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், தற்காலிக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தொழிலாளர்களை பல்வேறு வகையான வேலைகளுக்கு அவர்களின் தகுதியைக் கண்டறிய உள்ளூர் அதிகாரிகள் அவர்களை தொடர்பு கொண்டு விவரங்களை சேகரிக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளது. புலம் பெயர் தொழிலாளர்கள் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இடையே புலம் பெயர்வதை தடு்ப்பதை உறுதிப்படுத்துமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது.

தற்போது நிவாரண முகாம்களில் வசிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த விவரங்கள் சம்பந்தப்பட்ட உள்ளூர் அதிகார சபையில் பதிவு செய்யப்பட வேண்டும். மேலும் பல்வேறு வகையான வேலைகளுக்கு தொழிலாளர்களின் தகுதியைக் கண்டறிய அவர்களின் வேலை திறன் குறித்த திறன் வரைபடம் உருவாக்கப்பட வேண்டும் என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

ஏப்ரல் 20க்கு பிறகு கிராமப்புறங்களில் கட்டுமான நடவடிக்கைகள் மற்றும் தொழில் துறை செயல்பாடுகளுக்கு அனுமதி அளிப்பதாக சமீபத்தில் மத்திய அரசு குறிப்பிட்டிருந்தது. மேலும், மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலுவலகங்கள், அவசர சேவைகளுக்கான தனியார் வாகனங்கள், அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் இ-காமர்ஸ் நிறுவனங்கள்; கூரியர் சேவைகள், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகள் மற்றும் நிதித் துறை போன்றவை பொருளாதார நெருக்கடியை எளிதாக்க செயல்பட அனுமதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஏப்ரல் 20 முதல் கொரோனா தொற்று கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே ஒருங்கிணைந்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின்படி புதிய மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும். இந்த நிலையில் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள், தொழில்துறை, உற்பத்தி, கட்டுமானம், விவசாயம் மற்றும் , மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகளில் ஈடுபடலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் தங்களது பணியிடங்களுக்கு திரும்புவதற்கு முன்பு கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். சோதனையில் முடிவில் கொரோனா உறுதிசெய்யப்படாதவர்கள் மட்டுமே தங்கள் பணியிடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த மாதம் மூன்று வாரங்களுக்கு நாடு முழுவதும் முழு முடக்க நடவடிக்கை அமல்படுத்தப்படும் என்று கூறியிருந்தார். இதன் காரணமாக ஏப்ரல் 14 வரை அத்தியாவசியமற்ற அனைத்து தனியார் அரசு அலுவலகங்கள் மற்றும் பொது, தனியார் போக்குவரத்து என முற்றிலுமாக முடக்கப்பட்டது. பின்னர் இந்த முழு முடக்க நடவடிக்கை மே3 வரை நீட்டிக்கப்படும் என மோடி அறிவித்திருந்தார். இதனால் பெருமளவில் பொருளாதார பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்த்திட சில தளர்வுகள் அனுமதிக்கப்படும் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது.

பெருநகரங்களில் வாழும் விளிம்பு நிலை கூலித் தொழிலாளர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தினை முற்றிலுமாக இழந்துள்ளனர். போக்குவரத்து முடக்கப்பட்டதால் நடந்தே பலநூறு மைல்கள் பயணப்பட்டனர். இதில் பலர் வழியிலேயே உயிரிழந்தனர். இதனால் மத்திய அரசு இடம்பெயரும் தொழிலாளர்களைத் தடுத்து நிவாரண முகாம்களில் தங்க வைக்குமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தியது. 

ஏற்கெனவே மோசமான நிலையிலிருந்த இந்தியப் பொருளாதாரம் தற்போது கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையினால் மேலும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர், 2021-22 காலகட்டங்களில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.4 சதிவிகிமாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்திருந்தார். ஆனால், முன்னதாக இந்தியாவின் வருங்கால வளர்ச்சி என்பது 1.5-2.8 சதிவிகம் என்ற அளவில்தான் இருக்கும் என உலக வங்கி எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

.