This Article is From Apr 28, 2020

'முஸ்லிம் கடைக்காரர்களிடம் காய்கறி வாங்க வேண்டாம்' - பாஜக எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை

சுரேஷ் திவாரி பேசும் வீடியே 14 வினாடிகளைக் கொண்டதாக உள்ளது. அந்த வீடியோவில் அவர், 'ஒன்றை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். இதை நான் வெளிப்படையாகவே சொல்லிக் கொள்கிறேன். முஸ்லிம்களிடம் இருந்து மட்டும் காய்கறிகளை வாங்காதீர்கள்.' என்று கூறியுள்ளார்.

பாஜக எம்எல்ஏவின் சர்ச்சை பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Deoria, Uttar Pradesh:

முஸ்லிம் கடைக்காரர்களிடம் காய்கறி வாங்க வேண்டாம் என்று உத்தரப்பிரதேசத்தில் தியோரியா சட்டமன்ற தொகுதி பாஜக எம்எல்ஏ சுரேஷ் திவாரி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக விளக்கம் அளித்துள் அவர், தான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

சுரேஷ் திவாரி பேசும் வீடியே 14 வினாடிகளைக் கொண்டதாக உள்ளது. அந்த வீடியோவில் அவர், 'ஒன்றை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். இதை நான் வெளிப்படையாகவே சொல்லிக் கொள்கிறேன். முஸ்லிம்களிடம் இருந்து மட்டும் காய்கறிகளை வாங்காதீர்கள்.' என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோ இணைய தளங்களில் அதிகம் பகிரப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து செய்தியாளர்கள் அவரிடம் விளக்கம் கேட்டனர். அதற்கு சுரேஷ் திவாரி அளித்த பதில்-

நான் எனது தொகுதி மக்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். ஊரடங்கு குறித்து நாங்கள் பேசினோம். அப்போது, முஸ்லிம் வியாபாரிகளிடம் காய்கறிகள் வாங்காதீர்கள். அவர்கள் காய்கறிகளின் மேல் எச்சில் துப்பி விற்பனை செய்கிறார்கள் என்று என்னிடம் மக்கள் தெரிவித்தனர்.

அதற்கு அவர்களிடம், இந்த விஷயத்தில் என்னால் எதுவும் உதவ முடியாது. எனவே முஸ்லிம்களிடம் காய்கறிகள் வாங்குவதை தவிர்த்து, கொரோனாவிடம் இருந்து தப்பித்துக் கொள்ளுங்கள் என்று கூறினேன். மக்கள் என்னிடம் என்ன செய்யலாம் என்று கேட்கும்போது, ஒரு எம்எல்ஏவால் நான் என்ன அவர்களிடம் பதில் சொல்ல முடியும்?. இதை ஏன் பெரிய பிரச்னையாக மாற்றுகிறீர்கள்.

மஜ்லிஸ் கட்சி தலைவர் உவைசி இந்துக்களுக்கு எதிரான கருத்துக்களை கூறுகிறார். அதை வரும் பொருட்படுத்தவில்லை. நான் ஒரு எம்எல்ஏவாக எனது தொகுதிக்குள், தொகுதி மக்களின் நன்மைக்காக கூறினேன். அதை பிரச்னையாக மாற்றி விட்டார்கள்.

இவ்வாறு சுரேஷ் திவாரி கூறினார். பாஜக எம்எல்ஏவின் சர்ச்சை பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

உத்தரப்பிரதேசத்தில் முஸ்லிம் காய்கறி, பழ வியாபாரிகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று லகிம்பூரில் முஸ்லிம் பழ வியாபாரியை சிலர் சூழ்ந்துகொண்டு, அவர் தர்பூசணி பழத்தை விற்கும் முன்பாக அதில் எச்சில் துப்புகிறார் என்று கூறி பிரச்னை செய்தனர்.

இதுதொடர்பாக அந்த முஸ்லிம் வியாபாரி, தான் தவறு ஏதும் செய்யவில்லை. என்னை விட்டு விடும்படி கெஞ்சி கேட்கிறார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், அந்த வியாபாரி மீதான குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என்று போலீசார் அறிக்கை வெளியிட்டனர்.
 

.