This Article is From May 13, 2020

வாணியம்பாடியில் பழக்கடைகளை அகற்றிய சம்பவம்! வருத்தம் தெரிவித்த நகராட்சி ஆணையர்

அத்தியாவசிய தேவைப் பொருட்களை தள்ளு வண்டியில் விற்பனை செய்து கொள்ள தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதி அளித்தது. இந்த சூழலில் நகராட்சி ஆணையரின் நடவடிக்கை சாமானிய மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

நகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று திருப்பத்தூர் வியாபாரிகள் சங்கத்தினர் புகார் அளித்தனர்.

ஹைலைட்ஸ்

  • வாணியம்பாடியில் பழக்கடைகள் தள்ளிவிடப்பட்ட வீடியோ வைரலானது
  • நகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வியாபாரிகள் வலியுறுத்தல்
  • நடந்த செயலுக்கு நகராட்சி ஆணையர் வருத்தம் தெரிவித்துள்ளார்
Tirupattur:

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், பழக்கடைகளை நகராட்சி ஆணையர் அப்புறப்படுத்திய வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நகராட்சி ஆணையர் செசில் தாமஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். 

வாணியம்பாடியில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்பார்வையிட்ட நகராட்சி ஆணையர், தள்ளுவண்டியில் பழம் விற்பனை செய்யும் நபர்களை கண்டித்தார். தொடர்ந்து, வண்டியில் இருந்த பழங்களை கீழே தள்ளி விட்டார். அங்கிருந்த பழங்களை நகராட்சி ஆணையர் தலைமையிலான குழு அப்புறப்படுத்தியது.

இதுதொடர்பான 2 நிமிட வீடியோ காட்சிகள் நேற்று சமூக வலை தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏழை மக்களிடம் அதிகாரத்தை காட்டும் ஆணையர், பெரிய வணிக வளாகங்களில் இதே நடவடிக்கையை எடுப்பாரா என்று நெட்டிசன்கள் கொதித்தெழுந்தனர். 

அத்தியாவசிய தேவைப் பொருட்களை தள்ளு வண்டியில் விற்பனை செய்து கொள்ள தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதி அளித்தது. இந்த சூழலில் நகராட்சி ஆணையரின் நடவடிக்கை சாமானிய மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

நகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று திருப்பத்தூர் வியாபாரிகள் சங்கத்தினர் புகார் அளித்தனர்.

இந்த நிலையில், செசில் தாமஸை என்.டி.டி.வி. தொடர்பு கொண்டு பேசியது. அப்போது அவர், 'நான் மிகுந்த மன உளைச்சலில் அந்த நேரத்தில் இருந்தேன். நான் வியாபாரிகளிடம் பேசி வரத்தம் தெரிவித்தேன். காய்கறி சந்தையில் தள்ளு வண்டிக்கு அனுமதியில்லை. அங்கு பலரும் மாஸ்க் அணியாமலும், தனிநபர் இடைவெளியை கடைபிடிக்காமலும் இருந்தனர்.' என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் பொது முடக்கம் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், பல மாவட்டங்களில் மக்களும், அதிகாரிகளும் விதிகளை மீறுவதுபோன்ற தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. 

போலீஸ் அதிகாரிகள் மிகுந்த கடமை உணர்வுடனும், கண்காணிப்புடனும் செயல்பட்டு வருகின்றனர் என்றும், ஒரு சில இடங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் பெரிதுபடுத்தப்படுவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 

சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் போலீஸ் அதிகாரிகள் விதிகளை மீறி காய்கறி வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

.