உ.பி. விபத்தில் உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல். (File)
ஹைலைட்ஸ்
- புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்!
- விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
- உயிரிழந்த குடும்பங்களுக்கு அம்மாநில முதல்வர் இரங்கலை தெரிவித்துள்ளார்
New Delhi: உத்தர பிரேதசத்தில் விபத்தில் உயிரிழந்த 24 புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, உத்தர பிரதேசத்தின் அவுரியாவில் நடந்த சாலை விபத்து மிகவும் துயரமானது. தொடர்ந்து, நிவாரணப் பணிகளில் அம்மாநில அரசு ஈடுபட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய விரும்புகிறேன்” என்று பிரதமர் மோடி இந்தியில் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கை 85 ஆயிரத்தினை கடந்திருக்கக்கூடிய நிலையில், மார்ச் 25 அன்று அறிவிக்கப்பட்ட முழு முடக்க நடவடிக்கையானது தற்போது வரை அமலில் உள்ளது. இதன் காரணமாக தனியார் மற்றும் பொது போக்குவரத்துகள் கட்டுப்பாடுகளுடன் செயல்படுகின்றன. புலம் பெயர் பயணிகளுக்கான சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் பெரும்பாலான பயணிகள் சாலை மார்க்கமாக ஆயிரக்கணக்கான மைல்கள் வெறும் கால்களிலேயே கடக்க தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், சமீபத்தில் பல புலம் பெயர் தொழிலாளர்கள் சாலை விபத்துகளில் தொடர்ச்சியாக உயிரிழந்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தற்போது உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் ஏற்பட்ட விபத்தில் லாரியில் தங்கள் சொந்த மாநிலத்திற்கு பயணித்துக்கொண்டிருந்த புலம் பெயர் தொழிலாளர்கள் 24 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தானிலிருந்து கிளம்பி, பீகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் சென்றடைய பயணப்பட்ட புலம் பெயர் தொழிலாளர்கள் லக்னௌ அருகில் அவுரியா மாவட்டத்தில் அவர்கள் பயணம் செய்த லாரியானது மற்றொரு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கையில் உணவு பொட்டலங்களுடன் பயணித்த தொழிலாளர்கள், அவர்களின் உடல்களை மீட்கும்போது உணவு பொட்டலங்கள் சிதறிக்கிடப்பதைக் காட்சிகளில் காண முடியும்.
இந்த விபத்து குறித்து மாநில முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அவர் உயிரிழந்த குடும்பங்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளதாகவும். மீட்கப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பதை உறுதி செய்திட கேட்டுக்கொண்டுள்ளார் என்றும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. கான்பூரின் கமிஷ்னர் மற்றும் ஐஜி ஆகியோர் விபத்து நடத்த இடத்தினை ஆய்வு செய்து அறிக்கை அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் அலுவலக செய்திகள் தெரிவித்துள்ளது.
இதேபோல இரு தினங்களுக்கு முன்னர், இம்மாநிலத்தின் முசாபர் நகர் மாவட்டத்தில் நெடுஞ்சாலையில், பஞ்சாபிலிருந்து பீகார் திரும்பிக்கொண்டிருந்த புலம் பெயர் தொழிலாளர்கள் மீது உத்தரப் பிரதேச மாநில அரசு பேருந்து ஒன்று மோதியதில் 6 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து குறித்து பேருந்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். இதற்கு முன்னர் ஒரு பெண் மற்றும் அவரது மகள் உட்பட நான்கு பேர் தனித்தனி சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர்.
கடந்த வாரம், மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் ரயில் தண்டவாளத்தில் தூங்கிக்கொண்டிருந்த புலம் பெயர் தொழிலாளர்கள் மீது ரயில் ஏறியதில் 16 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியது.
புலம் பெயர் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு உணவு, குடிநீர் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், “யார் நடந்து செல்கிறார்கள், நடக்கவில்லை என்பதை இந்த நீதிமன்றம் கண்காணிக்க முடியாது" எனக்கூறி வழக்கினை தள்ளுபடி செய்தது. மேலும், “இது குறித்து நீதிமன்றம் ஏன் முடிவு செய்ய வேண்டும். அரசு முடிவு செய்யட்டும்” என வழக்கு விசாரணையின் போது நீதிமன்றம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.