காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி.
New Delhi: கொரோனா வைரஸ் தாக்குதல் குறையாத சூழலில் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு மாநிலங்கள் கோரிக்கை வைத்துள்ளன. இந்த நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பிரதமர் மோடி இன்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.
மகாராஷ்டிரா, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கை ஏப்ரல் 30-ம்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளன. இந்த நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறதா என்பது குறித்து பிரதமர் மோடி இன்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடுகிறார்.
முன்னதாக கடந்த சனிக்கிழமையன்று, பிரதமர் மோடி தலைமையில் அனைத்து மாநில முதல்வர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு மாநில முதல்வர்கள் வலியுறுத்தினர்.
கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கொரோனா வைரசுக்கு எதிராக கடுமையாக போராட வேண்டும் என்றும், அதே நேரத்தில் மக்களையும் அவர்களது வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றும் கூறினார்.
இதனால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே பிரதமர் மோடி அறிவிப்பதற்கு முன்பாக தமிழகம், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், மேற்கு வங்கம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் ஊரடங்கை ஏப்ரல் 30-ம்தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளன.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 35 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 308 ஆக அதிகரித்துள்ளது.
இதேபோல், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையானது, 9,152 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் அடங்கிய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை குழு நேற்று முதல் தங்களது அமைச்சரவை பணிகளை அலுவலகம் வந்து தொடர்கின்றனர்.
இதனிடையே, கொரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மண்டலங்களாக பிரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதில், 15 பேருக்கு அதிகமாக வைரஸ் பாதிப்பு இருந்தால், அது சிவப்பு மண்டலமாக பிரிக்கப்படும். அதற்கும் கீழ் உள்ள பகுதிகள் ஆரஞ்சு மண்டலமாக பிரிக்கப்படும், இதுவரை வைரஸ் பாதிப்பு பதிவாகாத பகுதிகள் பச்சை மண்டலமாக பிரிக்கப்படும்.
இதைத்தொடர்ந்து, நாட்டில் சரிபாதி மாவட்டங்கள் சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் மாறக்கூடும் என தெரிகிறது. இதுதொடர்பாக நேற்று வெளிவந்த தகவலில், நாட்டில் உள்ள பாதி மாவட்டங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள முதல் 6 மாநிலங்களாக மகாராஷ்டிரா (1,985) டெல்லி (1,154) தமிழ்நாடு (1,075) ராஜஸ்தான் (804), மத்தியப் பிரதேசம் (532), குஜராத் (516) ஆகிய மாநிலங்கள் உள்ளன.