நேற்று மும்பையில் வெளிமாநில தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
ஹைலைட்ஸ்
- ஊரடங்கு நீட்டிப்பால் வெளிமாநில தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்
- இறுதி சடங்கிற்கு பயன்படுத்தி வீசப்பட்ட பழத்தை எடுத்துச் செல்கின்றனர்
- பள்ளிகளில் தொழிலாளர்களை தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
New Delhi: டெல்லியில் யமுனை நதி அருகே, தூக்கி வீசப்பட்ட பழங்களில் இருந்து நல்ல பழங்களை எடுத்துச் சாப்பிடும் நிலைக்கு வெளி மாநில தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தொழில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வெளி மாநில தொழிலாளர்கள் நிலைமை மோசமாகியுள்ளது. டெல்லி, மும்பை போன்ற முக்கிய நகரங்களில் வசிக்கும் வெளி மாநில தொழிலாளர்கள், அரசின் உதவிகளையே முழுவதுமாக எதிர்பார்த்துள்ளனர்.
நேற்று தங்களை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கோரி மும்பையின் பாந்த்ராவில் ஆயிரக்கணக்கான வெளி மாநில தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், டெல்லியில் யமுனை நதி அருகே நிகாம்போத் என்ற இடத்தில், தூக்கி வீசப்பட்ட வாழைப்பழங்களில் இருந்து சிலவற்றை பொருக்கி எடுத்து தொழிலாளர்கள் சாப்பிடுகின்றனர். இதுதொடர்பான புகைப்படம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கு வீசப்படும் வாழைப்பழங்களில் பெரும்பாலானவை, இறுதிச் சடங்குகளுக்கு பயன்படுத்தப்படுபவைகள் ஆகும். அவற்றை எடுத்து சாப்பிடும் அளவுக்கு நிலைமை சென்றுள்ளது என்றால், எந்த அளவுக்கு வெளி மாநில தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.
பழங்களைப் பொருக்கும் உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரை சேர்ந்த தொழிலாளி ஒருவர் கூறுகையில், 'வாழைப்பழங்கள் சீக்கிரம் கெட்டுப்போகாது. நல்ல பழங்களை நாங்கள் பொருக்கி எடுத்து விட்டால் அது சாப்பாட்டுக்கு போதுமானதாக இருக்கும். எங்களுக்கு வழக்கமாக உணவு கிடைப்பதில்லை. எனவே நாங்கள் பழங்களை இப்படி சேகரித்துக் கொள்கிறோம்' என்று தெரிவித்தார்.
போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டதால் ஆயிரக்கணக்கான வெளி மாநில தொழிலாளர்கள், உணவு உறைவிடம் இன்றி நாட்டின் முக்கிய நகரங்களில் தவித்து வருகின்றனர்.
2 நாட்களுக்கு பின்னர் சீக்கிய குருத்துவாராவில் உணவை பெற்றுக் கொண்டதாக 55 வயதாகும் ஜெகதீஷ் குமார் என்பவர் தெரிவிக்கிறார்.
வெளிமாநில தொழிலாளர்கள் தங்குவதற்காக டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிகளை மாநில அரசு ஏற்பாடு செய்யத் தொடங்கியுள்ளது. இவ்வாறு சிக்கலில் தவிக்கும் வெளி மாநில தொழிலாளர்கள் இன்னும் 18 நாட்களை பொறுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
நாட்டில் கொரோனா தீவிரம் குறைந்தால் ஏப்ரல் 20-ம்தேதிக்கு பின்னர் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.