This Article is From May 14, 2020

நடைபாதை வியாபாரிகளின் நலனுக்காக ரூ. 5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! நிதியமைச்சர் அறிவிப்பு

ரூ. 50 ஆயிரத்திற்கு குறைவாக முத்ரா திட்டத்தில் கடன்பெற்றோர் குறித்த காலத்தில் கடனை திருப்பி செலுத்தினால் அவர்களுக்கு 2 சதவீத வட்டி தள்ளுபடி செய்யப்படும். இந்த வகைக்காக ரூ. 1,500 கோடி ஒதுக்கப்படும். 

நடைபாதை வியாபாரிகளின் நலனுக்காக ரூ. 5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! நிதியமைச்சர் அறிவிப்பு

டிஜிட்டல் முறையில் பணம் பெறும் வியாபாரிகளுக்கு சலுகைகள் அறிவிக்கப்படவுள்ளது.

New Delhi:

கொரோனாவால் ஏற்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் நடைபாதை வியாபாரிகளின் நலனுக்காக ரூ. 5 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் என்றும் இதனால் 50 லட்சம் பேர் பலன் அடைவார்கள் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ரூ. 20 கோடி மதிப்பிலான சிறப்பு திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து வருகிறார். இன்று 2-வது நாளாக அவர் அறிவிப்பை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

நடைபாதை வியாபாரிகளின் நலனுக்காக ரூ. 5 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும். சிறப்புத் திட்டத்தின் மூலம் அவர்களுக்கு கடனுதவி வழங்கப்படும். வியாபாரிகளுக்கு ரூ. 10 ஆயிரம் வரையில் கடன் வழங்குவதன் மூலம் சுமார் 50 லட்சம் பேர் பலன் பெறுவார்கள். 
 

ரூ. 50 ஆயிரத்திற்கு குறைவாக முத்ரா திட்டத்தில் கடன்பெற்றோர் குறித்த காலத்தில் கடனை திருப்பி செலுத்தினால் அவர்களுக்கு 2 சதவீத வட்டி தள்ளுபடி செய்யப்படும். இந்த வகைக்காக ரூ. 1,500 கோடி ஒதுக்கப்படும். 

வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கு குறைந்த செலவில் வாடகை வீடு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பான விரிவான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். தனியார் - அரசு - பொதுமக்கள் கூட்டு நடவடிக்கையாக இந்த திட்டம் மேற்கொள்ளப்படும். 

அடுத்த 2 மாதங்களுக்கு வெளி மாநில தொழிலாளர்களுக்கு இலவசமாக உணவுப் பொருட்களாக அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும். இதனால் சுமார் 8 கோடி வெளி மாநில தொழிலாளர்கள் பலன் அடைவார்கள். இதற்கான மொத்த செலவையும் மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும். இந்த வகைக்காக ரூ. 3,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டை இல்லாதவர்களும் உணவுப் பொருளை பெற்றுக் கொள்ளலாம். 

இந்த திட்டத்தில் பயனாளிகள் யார் யார் என்பதை மாநில அரசுதான் கண்டறிய வேண்டும். ரேஷன் கார்டுகள் வைத்திருப்போர் எந்த மாநிலத்திலும் உணவுப் பொருளை பெற்றுக் கொள்ளலாம். ஆகஸ்ட் மாதத்திற்குள் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் 83 சதவீத ரேஷன்தாரர்கள் இணைக்கப்படுவார்கள். மார்ச் 2021-க்குள் அனைத்து ரேஷன் அட்டை தாரர்களும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்திற்குள் இணைக்கப்படுவார்கள். 

இவ்வாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 

.