This Article is From Apr 02, 2020

அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வை மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி

2011-2016 காலகட்டங்களில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அம்மா உணவகம் வெற்றிகரமாக இயங்கியது.

அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வை மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி

முதலமைச்சர் வாடிக்கையாளர்களுடன் உரையாடி, உணவின் தரம் குறித்து அவர்களிடம் கேட்டார்.

Chennai:

சென்னை சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி திடீரென ஆய்வை மேற்கொண்டர். நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கிட்டதட்ட அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொது போக்குவரத்து மற்றும் அத்தியாவசமில்லாத தனியார் நிறுவனங்கள் என அனைத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கின்றது. இப்படியான சூழலில் இம்மக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்ய அம்மா உணவகம் சிறப்பான முறையில் பணியாற்றி வருகின்றது.

இந்த நிலையில் அம்மா உணவகத்தின் சுகாதார தன்மை மற்றும், சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகின்றதா என்பதைக் கண்டறிய மாநில முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதன் கிழமை காலை சென்னை சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வை மேற்கொண்டார். தன்னுடைய காலை உணவாக இட்லியை அம்மா உணவகத்தில் சாப்பிட்டார். மேலும், அங்கு உணவருந்திக்கொண்டிருந்த வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடி, உணவின் தரம் குறித்தும், உணவகத்தின் சமையல் முறைகள் மற்றும் சமையல் பொருட்கள் சேமிப்பின் விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

2011-2016 காலகட்டங்களில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அம்மா உணவகம் வெற்றிகரமாக இயங்கியது. இந்த உணவகம் சாமானிய மக்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்திருந்தது. இந்த உணவகத்தில் ரூ 1 க்கு இட்லி, ஒரு தட்டு  சாம்பார் சாதம் ரூ .5, கருவேப்பிலை சாதம் ரூ .5 மற்றும் ஒரு தட்டு தயிர் சாதம் ரூ .3. என்கிற மலிவு விலையில் விற்கப்படுகின்றது. தொடக்கத்தில் சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த உணவகங்கள் பின்பு தமிழகம் முழுக்க கொண்டு செல்லப்பட்டது. பின்னர் இது வெற்றிகரமான இயங்கத் தொடங்கியது. எனவே, இதனை கர்நாடகா போன்ற இதர பல மாநிலங்களில் பிரதிபலிக்கத் தொடங்கின.

இருப்பினும், நிதி நெருக்கடி காரணமாக இந்த திட்டம் சமீபத்திய ஆண்டுகளில் பாதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், மாநில அரசு கார்ப்பரேட்டுகளை தங்கள் சமூக பொறுப்புணர்வு நிதியை இந்த திட்டத்தில் பயன்படுத்த அழைத்தது.

இந்த முழு ஊரடங்கு நிலையில் பணிபுரிகின்ற மருத்துவர் மற்றும், சுகாதார ஊழியர்களுக்கான சிறப்பு ஊதியத்தினை முதல்வர் அறிவித்திருந்தார். இக்காலகட்டங்களில் பணியாற்றக்கூடிய தங்களுக்கும் இம்மாதிரியான சிறப்பு ஊதிய தொகுப்பு வழங்கப்பட வேண்டும் என்று அம்மா உணவக ஊழியர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர். தற்போது இந்த உணவக ஊழியர்கள் ரூ 9000 வரை ஊதியம் பெறுகின்றனர்.

பெயர் குறிப்பிட விரும்பாத தென்சென்னையில் உள்ள ஒரு உணவக சமையலர் "எல்லா வகையான மக்களும் இங்கு வருவதால் நாங்களும் வைரஸ் பாதிப்புக்குள்ளாகும் அபாயத்தை எதிர்கொள்கிறோம். இந்த ஊரடங்கு காலத்தில் நான் இங்கு வருவதை எனது குடும்பத்தினர் விரும்பவில்லை நாங்கள் மக்களைப் பற்றி கவலைப்படுவதால் மட்டுமே வருகிறோம். " என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் எங்களுடைய பங்களிப்பினை முதல்வர் அங்கீகரிக்க வேண்டும் என மற்றொரு ஊழியர் குறிப்பிட்டுள்ளார்.

.