This Article is From Apr 25, 2020

தமிழகத்தில் முழு ஊரடங்கு எதிரொலி: கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்!

தமிழகத்தில் 1,800க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தின் தலைநகரமான சென்னையில் மட்டும் 452 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் முழு ஊரடங்கு எதிரொலி: கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்!

Coronavirus lockdown Tamil Nadu: நாளை முழு ஊரடங்கு என்பதால், கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

Chennai:

கொரோனா நோய்த் தொற்றுப் பரவாமல் தடுக்க, தமிழகத்தில் 5 முக்கிய நகரங்களில் நாளை தொடங்கி, மூன்று முதல் நான்கு நாட்கள் வரை முழு ஊரடங்கை அமல்படுத்தப்படும் என அரசு நேற்றைய தினம் உத்தரவிட்ட நிலையில், இன்று காலை முதல் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.  இந்த முழு ஊரடங்கு உத்தரவின் போது, மளிகைக்கடைகளும், காய்கறி கடைகளும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டதன் காரணமாக தேவையான பொருட்களை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் கூடியுள்ளது. 

இந்நிலையில், மக்கள் கூட்டம் அதிகமாக கூடுவதன் காரணமாக சென்னை மாநகராட்சி முழு ஊரடங்கின் போது காய்கறி கடைகள் மட்டும் இயங்க அனுமதி அளித்துள்ளது. எனினும், மளிகை கடைகள் இயங்க அனுமதி வழங்கப்படவில்லை. அதேபோல், காய்கறி கடைகளை திறந்திருப்பவர்களும் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளிலும் ஊரடங்கு முழுமையாக 26.4.2020 காலை 6 மணி முதல் 29.4.2020 இரவு 9 மணி வரை அமல் படுத்தப்படும் என்றும், சேலம், திருப்பூர் மாநகராட்சிகளில் ஊரடங்கு முழுமையாக 26.4.2020 காலை 6 மணி முதல் 28.4.2020 இரவு 9 மணி வரை அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. 

இந்த முழு ஊரடங்கின் போது, மளிகைக் கடைகள் உட்பட அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகளும் திறக்க அனுமதி கிடையாது. காய்கறி கடைகள் மற்றும் உணவங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும், டோர் டெலிவிரி மட்டுமே செய்யப்பட வேண்டும். 

மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், போன்ற மருத்துவத் துறை சார்ந்த பணிகள், அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் தலைமைச்செயலகம், சுகாதாரம், காவல், வருவாய் (ம) பேரிடர் மேலாண்மை, மின்சாரம், ஆவின், உள்ளாட்சிகள், குடிநீர் வழங்கல் உள்ளிட்ட துறைகள் தேவையான பணியாளர்களுடன் மட்டும் செயல்படும்.

இதர மத்திய அரசு அலுவலகங்களிலும், வங்கிகளிலும் அத்தியாவசிய பணிகளுக்கு தேவைப்படும் 33% பணியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல், ஏடிஎம்கள், அம்மா உணவகஙள் வழக்கம்போல் செயல்படும் என தமிழக அரசு நேற்றைய தினம் அறிவிப்பு வெளியிட்டது.

ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த ஊரடங்கு உத்தரவு மே.3ம் தேதி வரை அமலில் இருக்கும் நிலையில், தமிழக அரசு 5 நகரங்களில் 3 முதல் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. ஏற்கனவே நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள், மருந்தகங்கள் தவிர எந்த விதமான கடைகள், வணிக நிறுவனங்களும் செய்லபட அனுமதி கிடையாது. 


எனினும், பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவத்றகாவும், சரிவடைந்த இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், ஏப்.20ம் தேதி முதல் மத்திய அரசு இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தி வருகிறது. 

அந்தவகையில், நேற்றிரவு மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், குடியிருப்பு பகுதிகளில் உள்ள கடைகள், சலூன்கள் மற்றும் டெய்லர் கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவானது வணிகர்களுக்கும், மக்களுக்கும் பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையில், முதன் முறையாக அத்தியாவசிய, அத்தியாவசிய தேவை இல்லாத கடைகளும் இயங்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

எனினும், இந்த உத்தரவில் மால்கள், வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகள் செயல்பட தொடர்ந்து, தடை நீடிக்கும் என அரசு அறிவித்துள்ளது. அதேபோல், இந்த கட்டுப்பாடு தளர்வுகள் என்பது கொரோனா பாதிப்பு அதிகமுள்ள ஹாட்ஸ்பாட் பகுதிகளுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 24,506 ஆக உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையும் 775 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 1,755 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். 

மாநிலத்தின் தலைநகரமான சென்னையில் மட்டும் 452 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோவையில் 141, திருப்பூரில் 56, மதுரையில் 56, சேலத்தில் 30 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

.