This Article is From May 30, 2020

ஊரடங்கால் வேலையில்லை: குடும்பத்தை கவனிக்க முடியாததால் ரயிலில் பாய்ந்து தற்கொலை!

Coronavirus Lockdown: ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல், பானு பிரகாஷ் வேலையில்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால், அவரது கையில் பணம் இல்லாமல் கடந்த சில நாட்களாக தவித்து வந்துள்ளார்.

ஊரடங்கால் வேலையில்லை: குடும்பத்தை கவனிக்க முடியாததால் ரயிலில் பாய்ந்து தற்கொலை!

நீடிக்கும் ஊரடங்கு: வருமானம் இல்லாமல், குடும்பத்தை கவனிக்க முடியாததால் ஒருவர் தற்கொலை!

Lucknow:

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தொடர்ந்து, நீட்டிக்கப்பட்டு வருவதால், குடும்பத்தை பார்த்துக்கொள்ள முடியவில்லை என எழுதி வைத்துவிட்டு, உத்தர பிரதேசத்தில் ஒருவர் 
தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தர பிரதேசத்தின் லகிம்பூர் கேரி மாவட்டத்தை சேர்ந்தவர் பானு பிரகாஷ் குப்தா. ஷாஜகான்பூர் மாவட்டத்தில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்த இவரது வருமானத்தை நம்பி, அவரது மனைவி, நான்கு குழந்தைகள், நோயுற்ற தாய் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில், பானு பிரகாஷ் ரயில் தண்டவாளத்தில் அடிபட்டு கிடந்துள்ளார். அவரது சட்டை பையில் தனது தற்கொலைக்கான காரணத்தையும் அவர் எழுதி வைத்துள்ளார். 

ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல், பானு பிரகாஷ் வேலையில்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால், அவரது கையில் பணம் இல்லாமல் கடந்த சில நாட்களாக தவித்து வந்துள்ளார். 

இதுதொடர்பாக பானு பிரகாஷ் எழுதியுள்ள தற்கொலை கடிதத்தில், தனது வீட்டில் கோதுமையும், அரிசியும் உள்ளது. அதனை தந்த அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால், அவை மட்டும் இருந்தால் போதாது. அதை தவிர்த்து சர்க்கரை, பால், உப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு தன்னிடம் போதிய பணம் இல்லை என்று தெரிவித்துள்ளார். 

மேலும், வயது முதிர்ந்த தனது தாயார் மிகவும் உடல்நலம் முடியாத நிலையில் உள்ளார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியாதது, தனக்கு கடும் வேதனை அளிப்பதாகவும், மாவட்ட நிர்வாகம் அவருக்கு உதவவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இதைத்தொடர்ந்து, உத்தர பிரதேச அரசு அந்த குடும்பத்திற்கு தேவையான உதவிகளை அளிப்பதாக உறுதியளித்துள்ளார். 

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஷைலேந்திர குமார் சிங் கூறும்போது, முதற்கட்ட விசாரணையை நடத்தியுள்ளோம். பானு பிரகாஷிடம் ரேஷன் கார்டு உள்ளது. அதில், அவர் இந்த மாதத்திற்கு தேவையான பொருட்களை பெற்றுள்ளார். அதனால், அவருக்கு உணவு பற்றாக்குறை ஏற்படவில்லை. தற்கொலைக்கான காரணங்கள் குறித்து நாங்கள் ஆராய்வோம் என்று அவர் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் இரண்டாவது ஆட்சிக்காலத்தின் முதல் ஆண்டு நிறைவு தினத்தை குறிப்பிட்டு, மத்திய அரசையும், உத்தர பிரதேசத்தில் ஆளும் அரசையும் கடுமையாக விமர்சித்துள்ளார். 

மேலும் அவரது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில், உத்தர பிரதேசத்தை சேர்ந்த பானு குப்தா ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது வேலை நிறுத்தப்பட்டுள்ளது. அவரும், அவரது தாயாரும் சிகிச்சை பெற வேண்டியிருந்தது.

அவருக்கு அரசிடம் இருந்து ரேஷன் பொருட்கள் மட்டுமே கிடைத்துள்ளது. ஆனால் அவரது தற்கொலை கடிதத்தில் மற்ற பொருட்களும் உள்ளன, அவற்றையும் வாங்க வேண்டிய தேவைகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். முதல் ஆண்டு கொண்டாட்டத்தில் இருப்பதால் இந்த கடிதம் உங்களை அடையாது என்று நினைக்கிறேன். ஆனால் தயவுசெய்து இதனைப் படியுங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

.