Morena, Coronavirus: அந்த நிகழ்ச்சி நடந்த காலனி சீல் வைக்கப்பட்டுள்ளது.
ஹைலைட்ஸ்
- 1,500 பேருக்கு விருந்தளித்த ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ்
- அவரது குடும்பத்தினர் 11 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி
- மத்திய பிரதேசத்தில் மட்டும் 154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Morena: மத்தியப் பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தில் துபாயிலிருந்து திரும்பியவருக்கும், அவரது குடும்பத்தினர் 11 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, அவர் உயிரிழந்த தனது தாயார் நினைவாக 1,500 பேருக்கு உணவு விருந்து அளித்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, அந்த நிகழ்ச்சி நடந்த இடம் புதிய கொரோனா தொற்று பகுதியாக உருவாகாமல் இருக்க மொத்த காலனிக்கும் உள்ளூர் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
துபாயில் பணிபுரிந்து வருபவர் சுரேஷ், இவர் கடந்த மார்ச் 17ம் தேதி சொந்த ஊர் திரும்பியுள்ளார். தொடர்ந்து, தனது தாயின் நினைவு தினத்திற்காக மார்ச் 20ம் தேதி விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார். இதில் 1,500 பேர் வரை கலந்து கொண்டு உணவு சாப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, சுரேஷூக்கு மார்ச்.25ம் தேதியன்று கொரோனா அறிகுறி இருந்துள்ளது. இதையடுத்து, 4 நாட்கள் கழித்து அவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, அவரும், அவரது மனைவியும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
தொடர்ந்து, அவரது உறவினர் 23 பேரிடம் அதிகாரிகள் கொரோனா பரிசோதனை நடத்தினர். அதில், 10 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதுதொடர்பாக மொரேனா தலைமை மருத்துவ அதிகாரி பாந்தில் கூறும்போது, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 2 பேருடன் தொடர்பில் இருந்த 23 பேரின் மாதிரிகளை நாங்கள் ஆய்வுக்கு அனுப்பினோம். அதில், 8 பெண்கள் உட்பட 10 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு இல்லாதவர்களும், 14 நாட்கள் தங்களது வீட்டிலே தனிமைப்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.
துபாயில் இருந்து திரும்பும் போது, சுரேஷூக்கு அங்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அப்போது அவருக்கு அறிகுறிகள் தென்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், மொரேனாவுக்கு வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தனது மனைவி உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் 2,547 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 62 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் மட்டும் கொரோனாவால்154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.