This Article is From May 14, 2020

கொரோனா வைரஸ் நிரந்தரமாக அழிய வாய்ப்பில்லாமல் போகலாம்: எச்சரிக்கும் WHO!!

WHO: “கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டம் என்பது மிக நீண்டதாக இருக்கும்"

கொரோனா வைரஸ் நிரந்தரமாக அழிய வாய்ப்பில்லாமல் போகலாம்: எச்சரிக்கும் WHO!!

WHO: "அனைத்து நாடுகளும் உச்சக்கட்ட உஷார் நிலையில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்றுதான் சொல்லுவோம்"

ஹைலைட்ஸ்

  • சீனாவின் உஹான் நகரத்தில்தான் கொரோனா வைரஸ் உருவானது
  • உலகிலேயே அமெரிக்காதான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது
  • இந்தியாவிலும் கொரோனா தீவிரமடைந்து வருகிறது.
Geneva, Switzerland:

உலகையே கடந்த சில மாதங்களாக அச்சுறுத்தி வரும் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ், மனிதர்களிடமிருந்து நிரந்தரமாக அழியாமல் இருக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பான WHO எச்சரித்துள்ளது. மேலும், கொரோனா வைரஸோடு மக்கள் வாழப் பழக வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. 

பல நாடுகளில் கொரோனா வைரஸைக் கட்டுக்குள் வைக்கும் நோக்கில் போடப்பட்டிருந்த முழு முடக்க நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு சீனாவின் உஹான் நகரத்தில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று, இதுவரை உலகம் முழுவதும் 42 லட்சத்திற்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. உலகளவில் 3,00,000 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் உலக சுகாதார அமைப்பின் அவசர சேவைகளின் இயக்குநர், மைக்கெல் ரியன், “கோவிட்-19 என்பது ஒரு புதுவித வைரஸ். இது எப்போது நம்மை விட்டுப் போகும் என்று சொல்வது கடினமாகும்.

இது நம்மைவிட்டு விலகாத ஒரு வைரஸாக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எச்ஐவி அப்படித்தான் நம்மைவிட்டுப் போகாமல் உள்ளது,” என்று கூறியுள்ளார்.

உலகின் பாதிக்கும் மேற்பட்ட மக்கள், கொரோனா வைரஸ் நெருக்கடி வந்ததிலிருந்து எதோவொரு வகையான ஊரடங்கிலும் கட்டுப்பாட்டுக்குள்ளும் உள்ளனர். தற்போது அந்தக் கட்டுப்பாடுகள் சிறிது சிறிதாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர், டெட்ரோஸ் அதோனம் கெப்ரியேசஸ், “பல நாடுகளும் இந்த நெருக்கடியிலிருந்து வெளியே வர பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டு வருகின்றன. ஆனால், எங்களைப் பொறுத்தவரை, அனைத்து நாடுகளும் உச்சக்கட்ட உஷார் நிலையில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்றுதான் சொல்லுவோம்,” என்றுள்ளார். 

மெக்கெல் ரியன் மேலும் பேசுகையில், “கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டம் என்பது மிக நீண்டதாக இருக்கும். இந்த வைரஸ் தொற்றானது நம்முள் இருக்கும் அதிக நல்ல விஷயங்களையும், சில மோசமான விஷயங்களையும் வெளியே கொண்டு வருகிறது. இதன் காரணமாகத்தான் கொரோனா வைரஸுக்கு எதிராக போராடி வரும் மருத்துவத் துறை ஊழியர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. 

இந்த வன்முறைச் சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டும். தங்களின் ஆற்றாமையை மக்கள் உதவி செய்ய வரும் மருத்துவத் துறை ஊழியர்கள் மீது காட்டக் கூடாது,” என்று வலியுறுத்தியுள்ளார். 

.