பெய்ஜிங்கில் மீண்டும் அதிகரிக்கும் வைரஸ் பாதிப்பு: கடுமையாக்கப்படும் ஊரடங்கு!
ஹைலைட்ஸ்
- பெய்ஜிங்கில் மீண்டும் அதிகரிக்கும் வைரஸ் பாதிப்பு
- தலைநகரில் தொற்றுநோய் பரவல் நிலைமை மிகவும் கடுமையாக உள்ளது
- தொற்று பரவல் கண்டறியப்பட்ட பின்னர் அதிகாரிகள் 11 சந்தைகளை மூடியுள்ளனர்.
Beijing, China: சீனாவில் மொத்த உணவு விற்பனை சந்தையுடன் தொடர்புடைய புதிய கொரோனா வைரஸ் தொற்று, மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து, தலைநகர் பெய்ஜிங் விமான நிலையத்தில் 1,200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து, அங்கு பள்ளிகளும் இன்று முதல் மூடப்பட்டுள்ளன.
சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது அலை பரவ தொடங்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், பெய்ஜிங்கில் இன்று மட்டும் புதிதாக 31 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, குடிமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
பெய்ஜிங்கில் புதிதாக பரவ தொடங்கும் இந்த வைரஸ் தொற்று, மொத்த உணவு சந்தையில் தொடங்கியதாக நம்பப்படுகிறது. இதற்காக சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது, நகரத்தில் கிட்டத்தட்ட 30 குடியிருப்பு வளாகங்கள் தற்போது பூட்டப்பட்ட நிலையில் உள்ளன.
குறைந்தது இன்று காலை மட்டும் 1,255 திட்டமிடப்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசு நடத்தும் பீப்பிள்ஸ் டெய்லி தெரிவித்துள்ளது. பெய்ஜிங்கில் இருந்து முக்கிய விமான நிலையங்களுக்குச் செல்லும் கிட்டத்தட்ட 70 சதவீதத்திற்கும் மேலான அனைத்து பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த தொற்று பரவல் காரணமாக ஏற்கனவே நகரத்தின் "மத்தியில் அல்லது அதிக ஆபத்துள்ள" பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பயணத் தடையை அறிவித்துள்ளனர், அதே நேரத்தில் மற்ற குடியிருப்பாளர்கள் பெய்ஜிங்கை விட்டு வெளியேற நியூக்ளிக் அமில சோதனைகளை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பல மாகாணங்கள் பெய்ஜிங்கிலிருந்து வரும் பயணிகளை தனிமைப்படுத்தியிருந்தன, அங்கு பெரும்பாலும் மீண்டும் திறக்கப்பட்ட அனைத்து பள்ளிகளும் மீண்டும் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகளுக்குத் திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளன.
"தலைநகரில் தொற்றுநோய் பரவல் நிலைமை மிகவும் கடுமையாக உள்ளது" என்று பெய்ஜிங் நகர செய்தித் தொடர்பாளர் சூ ஹெஜியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதிகளவிலான சோதனை
தொற்று பரவல் கண்டறியப்பட்ட பின்னர் அதிகாரிகள் 11 சந்தைகளை மூடியுள்ளனர். தொடர்ந்து, பெய்ஜிங்கில் உள்ள ஆயிரக்கணக்கான உணவு மற்றும் குளிர்பான தொழிற்சாலைகளுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்துள்ளனர்.
நகரில் கடந்த ஆறு நாட்களில் மட்டும் 137 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, இன்று மட்டும் புதிதாக 6 பேருக்கு அறிகுறிகள் மற்றும் மூன்று பேருக்கு பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சோதனையில் உள்ளனர் என்று நகராட்சி சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுவரை குழுவாக விளையாடும் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் நெரிசலான இடங்களில் முகமூடிகளை அணியுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தொற்று நோயை கட்டுக்குள் கொண்டும் வரும் விதமாக மாகாணங்களுக்கு இடையேயான குழு சுற்றுப்பயணங்களுக்கு தடை விதிகப்பட்டுள்ளது.
பெய்ஜிங்கிற்கு 70 சதவீதத்திற்கும் அதிகமான பழங்கள் மற்றும் காய்கறிகளை வழங்கும் ஜின்ஃபாடி சந்தையில் மே.30ம் தேதி முதல் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பார்வையிட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக அங்குள்ள 8,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.