இந்தியாவின் கோவிட் -19 மீட்பு விகிதம் இன்று 50 சதவீதத்தை தாண்டியது.
New Delhi: நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3.20 லட்சமாக அதிகரித்துள்ள நிலையில், தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கையானது 50 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மொத்தமாக தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 50.60 சதவிகிதத்தினர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் ஒரே நாளில் ஏறத்தாழ 11 ஆயிரம் பேர் இரண்டாவது நாளாக நேற்றைய தினத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது 1,49,348 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். 1,62,378 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக நேற்று 8,049 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதே போல கடந்த 24 மணி நேரத்தில் 311 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக தொற்றால் உயிரிழந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 9,195 ஆக அதிகரித்துள்ளது.
ஐசிஎம்ஆர்-ன் அறிக்கையின்படி கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 1,51,432 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 56,58,614 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியின் லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜால் மற்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை சந்தித்து தேசிய தலைநகரில் தொற்றுநோயை ஆய்வு செய்தார். கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல், சோதனைகளை அதிகரித்தல் மற்றும் நகரத்தில் போதுமான சுகாதார உள்கட்டமைப்பு போன்றவை குறித்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி மற்றும் குஜராத் மாநிலங்களில் கடந்த ஒரு வாரத்தில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல 2,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.