This Article is From Mar 21, 2020

மும்பையில் அனைத்து அலுவலகங்களையும் மார்ச் 31-ம்தேதி வரை மூட அதிரடி உத்தரவு!!

Coronavirus : அத்தியாவசிய தேவை பொருட்களை வழங்கும் கடைகளைத் தவிர மற்ற அனைத்து நிறுவனங்களையும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மும்பையில் அனைத்து அலுவலகங்களையும் மார்ச் 31-ம்தேதி வரை மூட அதிரடி உத்தரவு!!

25 சதவீத ஊழியர்களுடன் மட்டுமே அரசு அலுவலங்கள் மும்பையில் இயங்கும் என முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

ஹைலைட்ஸ்

  • நாட்டில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் மகாராஷ்டிரா
  • 52 பேருக்கு மகாராஷ்டிராவில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
  • பஸ், ரயில் சேவை துண்டிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் முதல்வர்
Mumbai:

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மும்பையில் உள்ள அனைத்து அலுவலகங்களையும் மார்ச் 31-ம்தேதி வரை மூட மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இருப்பினும் அத்தியாவசிய பொருட்களை வழங்கும் கடைகள், நிறுவனங்களுக்கு மட்டும் இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இங்கு 52 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே மற்ற மாநிலங்களை விடக் கூடுதல் கவனமாக மகாராஷ்டிரா செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மும்பை, புனே, பிப்ரி சிங்க்வாட், நாக்பூர் ஆகிய நகரங்களில் மக்களின் அத்தியாவசிய பொருட்களை வழங்கும் கடைகளைத் தவிர்த்து மற்ற அனைத்து அலுவலகங்களையும் மூட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதற்காக பணியாளர்களுக்கு ஊதியத்தை நிறுத்தக் கூடாது என்று கோரிக்கை வைத்துள்ள முதல்வர் உத்தவ் தாக்கரே, பேரழிவுகள் வரும் போகும். ஆனால் உங்கள் மனித நேயத்தை விட்டு விடாதீர்கள் என்று கூறியுள்ளார். 

மக்கள் ரயில்கள் மற்றும் பேருந்துகளில் செல்வதைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ள உத்தவ், இதற்கு மாற்றமாக அதிக எண்ணிக்கையில் மக்கள் சென்றால் அந்த சேவைகள் நிறுத்தப்படும் என்று எச்சரிக்கை செய்துள்ளார்.

மும்பையின் பெரும்பாலான இடங்களில் உணவுகளை வழங்கும் டப்பா வாலாக்கள் தங்களது சேவையை நேற்றுடன் நிறுத்திக் கொண்டனர். 

25 சதவீத ஊழியர்களுடன் மும்பையில் அரசு அலுவலகங்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1-8 வரையிலான மாணவர்களுக்குத் தேர்வே கிடையாது என்று அறிவித்துள்ள மாநில கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட், 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ஏப்ரல் 15-க்கு பின்னர் நடைபெறும் என்று கூறியுள்ளார். 

.