This Article is From Mar 24, 2020

'கொரோனா வைரஸ் என்பது வாழ்நாள் சவால்; புதிய வழிகளில் அதை எதிர்கொள்ள வேண்டும்' : மோடி

டிஜிட்டல் முறையில் பணப் பரிமாற்றம் செய்வது குறித்து, செய்தி நிறுவனங்கள் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் கரன்சி நோட்டுகள் வழியே வைரஸ் பரவுவது தடுக்க முடியும். 

'கொரோனா வைரஸ் என்பது வாழ்நாள் சவால்; புதிய வழிகளில் அதை எதிர்கொள்ள வேண்டும்' : மோடி

கொரோனா வைரஸ் தொடர்பான செய்திகளை மக்களிடம் அளித்து வருவதற்காக பத்திரிகை மற்றும் ஊடகத்துறையினருக்கு மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

ஹைலைட்ஸ்

  • பத்திரிகையாளர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்
  • கொரோனா என்பது வாழ்நாள் சவால், அதை புதிய வழிகளில் எதிர்க்க வேண்டும்
  • பத்திரிகை, ஊடகங்கள் கொரோனா குறித்து விழிப்புணர்வு செய்வதாக மோடி பாராட்டு
New Delhi:

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் என்பது வாழ்நாள் சவால் என்றும், அதனை புதிய வழிகளில் எதிர்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 

பல்வேறு செய்தி ஊடகங்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, வீடியோ கான்பரன்சிங் முறையில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் மோடி பேசியதாவது-

செய்தியாளர்கள், கேமரா ஒளிப்பதிவாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என செய்தித்துறையில் உள்ள ஒவ்வொருவரும் இந்த நாட்டிற்குக் கடுமையாக உழைத்து வருகின்றனர். தொலைத் தொடர்பின் மூலம் ஊடகங்கள் கொரோனா குறித்த அச்சத்தைப் போக்க வேண்டும். 

இந்த கொரோனா ஒரு வாழ்நாள் சவாலாகும். இதனை புதிய வழிகளில் நாம் எதிர்கொள்ள வேண்டும். கொரோனா தொற்று நோயை இந்திய ஊடகங்கள் நன்றாக உணர்ந்து செயல்படுகின்றன. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

இன்னும் நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது. விழிப்புணர்வு செய்து, தனிமைப்படுத்திக் கொள்வது, சமீபத்திய தகவல்கள், தாக்கங்களைப் பகிர்ந்து கொள்வது, மக்களிடம் கொரோனா தடுப்ப முறைகளைச் சென்று சேர்ப்பதன் மூலம் அதனை நாம் எதிர்க்க முடியும்.

மக்களின் எண்ண ஓட்டங்களை ஊடகங்கள் வெளிப்படுத்துகின்றன. அதனைக் கவனித்து அரசு செயல்படுகிறது. 

களத்தில் நிற்கும் செய்தியாளர்களின் பாதுகாப்பை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். அறிவியலாளர்களின் பேட்டிகளைச் செய்தி ஊடகங்கள் அதிகம் பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் தவறான தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுக்க முடியும். 

கொரோனா குறித்த ஆக்கப்பூர்வமான செய்திகளை, குறிப்பாகப் பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் செய்திகளை மக்களிடம் ஊடகங்கள் சென்று சேர்க்க வேண்டும். 

டிஜிட்டல் முறையில் பணப் பரிமாற்றம் செய்வது குறித்து, செய்தி நிறுவனங்கள் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் கரன்சி நோட்டுகள் வழியே வைரஸ் பரவுவது தடுக்க முடியும். 

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். இந்த கூட்டத்தில் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தகவல் தொழில்நுட்ப செயலர், சுகாதாரத்துறைச் செயலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

.