கொரோனா வைரஸ் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவருக்கு அக்கம்பக்கத்தினர் சிறப்பு வரவேற்பு அளித்தனர்.
தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 37 ஆயிரத்திற்கும் அதிகமாக உயர்ந்திருக்கக்கூடிய நிலையில் மக்களுக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணிக்கும் பலரை இந்த நேரத்தில் மக்கள் சரியாக அடையாளம் கண்டு அவர்களைப் பெருமைப்படுத்துகின்றனர். அப்படியொரு நெகிழ்வான சம்பவம் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கொரோனா தொற்று நோயாளிகளுக்கான மருத்துவமனையில் ஐ.சி.யூ பிரிவில் 20 நாட்கள் பணி செய்துவிட்டு வீடு திரும்பிய மருத்துவரைப் பாராட்ட மருத்துவரின் குடும்பத்தினர் மற்றும் அவரின் குடியிருப்பு அக்கம் பக்கத்தினர் ஒன்று திரண்டு மலர் தூவியும், கைகளை தட்டியும், பாத்திரங்களைத் தட்டி ஓசையெழுப்பியும் வரவேற்றிருந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நெகிழ்ச்சியால் மருத்துவர் ஆனந்தக் கண்ணீர் விட்டழுதார்.
மருத்துவர் ஆனந்தக் கண்ணீர் விடும் காட்சியும், அவரை வரவேற்கக் கையில் வாழ்த்து அடைகளைப் பிடித்தவாறு காத்திருக்கும் குடியிருப்பு வாசிகளின் காட்சியும் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன. பேஸ்புக்கில் இந்த வீடியோவை 11 மில்லியன் பேர் இதுவரை பார்த்திருக்கிறார்கள். ஒரு மில்லியனுக்கும் அதிகமான பயன்பாட்டாளர்கள் வீடியோவினை லைக் செய்திருக்கிறார்கள்.
“அந்த பெண்மணிக்கும் மற்றும் உலகமெங்கும் கொரோனா தொற்றுக்கு எதிராக களத்தில் உள்ள கொரோனா வீரர்களுக்கும் வணக்கம்.“ என ஒரு பயனாளர் தன்னுடைய கருத்தினை தெரிவித்துள்ளார்.
“இது போன்ற தருணங்கள் இதயத்தினை மகிழ்விக்கின்றன. இதுதான் இந்தியாவின் ஆத்மா.“ என மற்றொரு பயனாளர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் அனைவரும் கொரோனா வீரர்கள் என சமூக வலைத்தளங்களில் விளிக்கப்படுகின்றனர். கடந்த மாதம் இந்த கொரோனா வீரர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக கைகளைத்தட்டி உற்சாகப்படுத்தப் பிரதமர் அழைப்பு விடுத்திருந்ததன் பேரில் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் பால்கனியில் வந்து கைகளைத்தட்டினர்.
Click for more
trending news