Read in English
This Article is From Jun 08, 2020

கொரோனா வைரஸிலிருந்து விடுபட்ட நியூசிலாந்து - சாதித்தது எப்படி?

தற்போது தளர்த்திய கட்டுப்பாடுகள் மூலம் நைட் க்ளப் உள்ளிட்ட கேளிக்கை விடுதிகள் திறக்கப்படும். சினிமா தியேட்டர்களும் மீண்டும் திறக்கப்படும்.

Advertisement
உலகம் Edited by

இன்று நியூசிலாந்தின் பிரதமர் ஜாசிந்தா அர்டெர்ன், வைரஸ் தொற்றால் போடப்பட்டுள்ள பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Highlights

  • நியூசிலாந்து பிரதமர் இச்செய்தி குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்
  • 'என் மகளுடன் நான் நடமாடினேன்'- நியூசி பிரதமர் அடெர்ன்
  • மொத்தமாக 1,154 பேருக்கு மட்டுமே நியூசியில் கொரோனா தொற்று ஏற்பட்டது
Wellington, New Zealand:

நியூசிலாந்து நாட்டில் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று முற்றிலுமாக நீங்கிவிட்டதாக அந்த நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. கடைசியாக தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நபரும் இன்று குணமடைந்த நிலையில், ஆக்டிவ் கேஸ் பூஜ்ஜியத்துக்கு வந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

இந்த செய்தி குறித்து சுகாதாரத் துறை பொது இயக்குநர், ஆஷ்லி ப்ளூம்ஃபீல்டு, “இது எங்களுக்குக் கிடைத்திருக்கக் கூடிய மிக மகிழ்ச்சியான செய்தியாகும். இந்த செய்தியை மொத்த நியூசிலாந்தும் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்ளலாம். 

பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதிக்குப் பின்னர் இப்போதுதான் எங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்பான ஆக்டிவ் கேஸ் ஏதும் இல்லை என்ற நிலை வந்துள்ளது. இது கொரோனாவுக்கு எதிரான எங்கள் போராட்டத்தில் மிக முக்கியமான மைல்கல் ஆகும். அதே நேரத்தில் கோவிட்-19 தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும். தற்போதைய சூழலில் அது மிக முக்கியமாகும்,” என்று உறுதிபட தெரிவித்துள்ளார். 

Advertisement

உலகமே கடந்த பல மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்றால் தத்தளித்து வருகிறது. சில நாடுகள் மட்டுமே தொற்றை கட்டுக்குள் வைத்திருப்பதில் வெற்றி கண்டன. அதில் ஒரு நாடுதான் நியூசிலாந்து. அதற்காக உலக சுகாதார அமைப்பு உள்ளிட்டப் பல்வேறு சர்வதேச அமைப்புகள், நியூசிலாந்துக்குப் பாராட்டுகள் தெரிவித்தன. நியூசிலாந்தில் பலத்தக் கட்டுப்பாடுகளுடன் 7 வாரங்களாக முழு லாக்டவுன் அமலில் இருந்தது. கடந்த மாத இறுதியில்தான் லாக்டவுன் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. 

சுமார் 50 லட்சம் மக்கள் வசிக்கும் நியூசிலாந்தில், 1,154 பேர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 22 பேர் உயிரிழந்தனர். 

Advertisement

கடந்த 17 நாட்களாக அந்நாட்டில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ஒரே ஒருவருக்கு மட்டுமே தொற்று இருந்தது. அவருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இறுதியாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருந்த நபர் குறித்த விவரங்கள், பாதுகாப்பு காரணமாக வெளியிடப்படவில்லை. ஆனால், அவர் 50 வயது மதிக்கத்தக்க பெண் என்றும், ஆக்லாண்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது என்றும் சொல்லப்படுகிறது. 

Advertisement

“கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த கடைசி நோயாளிக்கு கடந்த 48 மணி நேரம் தொற்றுக்கான எந்த அறிகுறியும் இல்லை. அவர் தற்போது தனிமைப்படுத்தப்படவில்லை” என்று கூறியுள்ளது சுகாதாரத் துறை. 

இன்று நியூசிலாந்தின் பிரதமர் ஜாசிந்தா அர்டெர்ன், வைரஸ் தொற்றால் போடப்பட்டுள்ள பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Advertisement

அவர், “கடந்த சில வாரங்களாக நியூசிலாந்து மக்கள் செய்த தியாகத்தால்தான் இந்தப் போராட்டத்தில் வெற்றி காண முடிந்தது. ஆக்டிவ் கேஸ் பூஜ்ஜியம் என்ற செய்தி வந்தவுடன் என் குழந்தையோடு நான் நடமாடி அதைக் கொண்டாடினேன்.

எல்லைக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம் நியூசிலாந்தின் பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெரும். தற்போதைக்கு உலக அளவில் அதிக தளர்வுகள் அளித்துள்ள நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்று.” எனக் கூறியுள்ளார். 

Advertisement

தற்போது தளர்த்திய கட்டுப்பாடுகள் மூலம் நைட் க்ளப் உள்ளிட்ட கேளிக்கை விடுதிகள் திறக்கப்படும். சினிமா தியேட்டர்களும் மீண்டும் திறக்கப்படும். அதேபோல அனைத்து விளையாட்டுத் தொடர்களும் எந்தவித  கட்டுப்பாடுமின்றி நடக்கும்.

உலகில் பல நாடுகள் விளையாட்டுத் தொடர்களை விரைவில் நடத்த இருந்தாலும், ரசிகர்கள் இல்லாமலேயே அதை நடத்த திட்டமிட்டுள்ளன. ஆனால் நியூசிலாந்தில் அப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் இருக்கப் போவதில்லை.

Advertisement