அவர், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளார்
ஹைலைட்ஸ்
- இந்தியாவில் 169 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்
- தமிழகத்தில் நேற்று ஒருவருக்கு கொரானா இருப்பது உறுதி செய்யப்பட்டது
- இந்தியாவில் 3 பேர் கொரோனாவால் உயரிழந்துள்ளனர்
தமிழகத்தில் இருவருக்கு கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது 3வது நபருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர், “அயர்லாந்தின் டப்ளினில் இருந்து மார்ச் 17 ஆம் தேதி சென்னைக்கு வந்த 21 வயது மாணவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் சென்னை வந்தபோதே, கொரோனா குறித்த சோதனை செய்யப்பட்டு, வீட்டில் தனிமையில் வைக்கப்பட்டார்.
நேற்று ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிடம், தனக்கு கொரோனா குறித்த அறிகுறிகள் இருப்பதாகத் தெரிவித்தார். நேற்று அவரின் ரத்த மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்டது. அதன் முடிவு இன்று வந்தது. அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. தற்போது பாதிக்கப்பட்ட அந்த மாணவர் நலமோடு இருக்கிறார். அவர், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளார்,” என்று ட்விட்டர் மூலம் கூறியுள்ளார்.
தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர், “இதுவரை வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்தவர்களில் 1,94,236 பேரிடம் கொரோனா குறித்த சோதனை செய்யப்பட்டது. அவர்களில் 3,481 தொடர் கண்காணிப்பில் உள்ளனர். 39 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 320 ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. அதில் 232 மாதிரிகள் நெகட்டிவ் எனவும், 2 மாதிரிகள் பாசிட்டிவ் எனவும் வந்துள்ளன. 86 பேரின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன,” எனத் தெரிவித்துள்ளார்.