நாட்டின் மொத்த பாதிப்பில் 21 சதவீதம் மும்பையில்தான் உள்ளது.
ஹைலைட்ஸ்
- நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நகரமாக மும்பை மாறியுள்ளது
- 3500-க்கும் அதிகமான படுக்கைகள் நிரம்பியுள்ளன
- அனைத்து வென்டிலேட்டர்களும் பயன்பாட்டில் உள்ளதால் நெருக்கடி
New Delhi: கொரோனா வைரஸால் நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில், ஏறக்குறைய அனைத்து படுக்கைகளும் நிரம்பி விட்டன. கூடுதலாக பாதிக்கப்பட்டோர் வந்து கொண்டிருப்பதால் மாற்று வழிகளை அதிகாரிகள் ஏற்பாடு செய்யத் தொடங்கியுள்ளனர்.
மும்பை மருத்துவமனைகளில் கொரோனா பாதிக்கப்பட்டோருக்காக 3,500 படுக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. தற்போது அவை அனைத்தும் நிரம்பி விட்டன. இதனால் மருத்துவமனைகளில் தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பது சிரமமாக மாறியுள்ளது.
நெருக்கடியை சமாளிக்கும் விதமாக ஏற்கனவே இருக்கும் படுக்கைகளுக்கு இடையிலான தூரம் குறைக்கப்பட்டுள்ளது.
'கொரோனாவால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு விட்ட நிலையில் நோயாளிகளுக்குள் தனி நபர் இடைவெளி தேவையில்லை' என்பது அதிகாரிகளின் கருத்தாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் படுக்கைகளுக்கு இடையிலான இடைவெளி குறைக்கப்பட்டு, கூடுதலாக 1,500 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக நாயர் மருத்துவமனையில் மொத்த படுக்கைகளின் எண்ணிக்கை 336-ல் இருந்து 800 ஆகவும், கே.இ.எம். மருத்துவமனையில் படுக்கைகளின் எண்ணிக்கை 200-ல் இருந்து 220 ஆகவும், செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையில் 400-ல் இருந்து 690 ஆகவும் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிடும் வகையில் மும்பை மருத்துவமனைகளில் இருக்கும் 250 வென்ட்டிலேட்டர்களும் தற்போது பயன்படுத்தப்பட்டு வருவதால் சிக்கல் எழுந்துள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் இதய சிகிச்சை பிரிவில் வென்ட்டிலேட்டர்கள் வைக்கப்பட்டிருக்கும். அவற்றை தந்து உதவுமாறு தனியார் மருத்துவமனைகள் கோரப்பட்டுள்ளன. அந்த வகையில் சுமார் 200 வென்ட்டிலேட்டர்கள் கிடைக்கும்.
நாட்டிலேயே மும்பைதான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நகரமாக இருக்கிறது. இம்மாத இறுதிக்குள் சுமார் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் மொத்த பாதிப்பில் 21 சதவீதம் மும்பையில்தான் உள்ளது. மும்பையில் மட்டும் 556 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் பலி எண்ணிக்கை 921 ஆக உள்ளது.