வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் வைத்திப்பது கட்டாயம் இல்லை என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
ஹைலைட்ஸ்
- கொரோனாவால் வர்த்தகத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது
- தொழில் துறையினர் நலனுக்காக மத்திய அரசு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது
- ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க சேவைக்கட்டணம் தற்காலிமாக ரத்து செய்யப்படுகிறது
New Delhi: டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் எந்த ஏ.டி.எம்.களிலும் பணம் எடுத்துக்கொள்வதற்கு சேவைக் கட்டணம் கிடையாது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த முறை அடுத்து வரும் 3 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும்.
கொரோனா பாதிப்பை தொடர்ந்து, மத்திய நிதி அமைச்சகம் இந்த சலுகையை அறிவித்துள்ளது. இதனால் மக்கள் தங்களது அருகில் உள்ள ஏ.டி.எம்.களையே அவசர தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இதேபோன்று வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் வைத்திப்பது கட்டாயம் இல்லை என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
இந்த அறிவிப்பு சிறு குறு தொழில் செய்வோருக்கு பலன் உள்ளதாக இருக்கும். நாடு முழுவதும் மாநிலங்கள் முடக்கப்பட்டுள்ளதால் தொழில் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
2018 -19-ம் நிதியாண்டுக்கான வருமான வரி மற்றும் ஜி.எஸ்.டி. ஆகியவற்றை தாக்கல் செய்வதற்கு தாக்கல் செய்வதற்கு ஜூன் 30-ம்தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பான் - ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவும் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தற்போது கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏ.டி.எம்.களில் மாதத்திற்கு 5 முறை பணம் எடுத்துக்கொள்வதற்கு சேவைக் கட்டணம் இல்லை. அதைத் தாண்டும்போது குறிப்பிட்ட தொகை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கணக்கு இல்லாத மற்ற வங்கி ஏ.டி.எம்.கள் சிலவற்றில், மாதம் 3 முறை பணம் எடுப்பதற்கு இலவசமாகவும், அதற்கு மேல் சென்றால் குறிப்பிட்ட தொகையும் கட்டணமாக வசூலிக்கப்படும்.
கொரோனா பாதிப்பு காரணமாக தொழில்துறைக்கு பல்வேறு சலுகைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.