குங்குமம் போன்றவற்றை கைகளால் வழங்குவதும், புனித நீரை தெளிப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது.
New Delhi: நாடு முழுவதும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக முழு முடக்க நடவடிக்கை கடந்த மார்ச் 25 முதல் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக போக்குவரத்து மட்டுமல்லாது அனைத்து வணிக வளாகங்கள் மற்றும் வடக்கில் வைஷ்ணவி தேவி கோயில் தொடங்கி தெற்கில் சபரி மலை வரை அனைத்து வழிபாட்டுத்தலங்களும் மூடப்பட்டது. இந்நிலையில் இம்மாதம் 8-ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள வழிபாட்டுத்தலங்கள் மற்றும் வணிக வளாகங்களை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் மத வழிபாட்டுத்தலங்களுக்கான புதிய பாதுகாப்பு நெறிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
முந்தியடித்துக் கொண்டு செல்லுவதை வழிபாட்டுத்தலங்களில் தவிர்க்க வேண்டும். அதே போல பிரசாதங்கள் வழங்கப்படக்கூடாது. குங்குமம் போன்றவற்றை கைகளால் வழங்குவதும், புனித நீரை தெளிப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது. வழிபாட்டுத்தலங்களில் பக்தர்கள் பாடுவது தடை செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட இசையே ஒலிக்க வேண்டும் என மத்திய அரசு வெளியிட்டுள்ள பாதுகாப்பு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. மேலும், வழிபாட்டுத்தலங்களுக்குள் நுழையும் முன்னர் பக்தர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனைகள் கட்டாயமாக மேற்கொள்ளப்பட வேண்டும். பார்வையாளர்களுக்கு தனி நுழைவுவாயில் மற்றும் வெளியேறுவதற்கான தனிவாயில்கள் அமைக்கப்பட வேண்டும். இந்த வாயில்களில் வரிசையில் நிற்கும்போது கட்டாயமாக 6 அடி இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
திறக்கப்பட இருக்கும் வழிபாட்டுத்தலங்களுக்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை பல மாநிலங்கள் ஏற்கெனவே முன்னெடுத்துள்ளன.
எந்த மதம் சார்ந்த வழிபாட்டுத்தலங்களுக்குள் நுழையும் முன்னர் கை கால்களை சோப்பு போட்டு கழுவ வேண்டும். அறிகுறியற்ற நபர்கள் மட்டுமே வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். பொதுவான பிரார்த்தனை பாய்களை தவிர்க்க வேண்டும். பக்தர்கள் வீட்டிலிருந்தே பாய்களை கொண்டுவர வேண்டும்.
அதேபோல சிலைகள் மற்றும் புராதன சின்னங்களை தொடுவதற்கு அனுமதி கிடையாது. மத கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்க வேண்டும். பெரிய அளவில் நடத்தப்படும் கூட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் பார்வையாளர்கள் நுழைவதை வழிப்பாட்டு தல நிர்வாகங்கள் தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இவையனைத்தும் பொது சுகாதார பாதுகாப்பின் ஒரு அங்கமாக அரசு வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் தொற்றை தடுக்க பெரிதளவு உதவும்.