கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
New Delhi: உலக நாடுகளை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 173-ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு உயிரிழப்பு பஞ்சாபில் இன்று நேர்ந்திருக்கிறது.
இந்த நிலையில், மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை, கொரோனாவின் தாக்கம், அதிலிருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் செய்யவேண்டியது உள்ளிட்டவை தொடர்பாக பிரதமர் மோடி இன்றிரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அவரது உரையின் முக்கிய அம்சங்களாவன -
1. அடுத்து வரும் சில வாரங்களுக்கு அவசியம் ஏற்பட்டாலே தவிர, மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.
2. மக்கள் ஊரடங்கு உத்தரவை ஞாயிறு முதற்கொண்டு பின்பற்றி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டை விட்டு வெளியே வருவதை தவிருங்கள்.
3. நாம் பொறுப்புள்ள குடிமக்களாக இருக்க வேண்டும். மத்திய மாநில அரசுகளின் உத்தரவுகளை ஏற்று நடக்க வேண்டும்.
4. உணவு போன்ற அடிப்படை தேவைப் பொருட்களை பதுக்க வேண்டாம். பற்றாக்குறையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
5. கொரோனா வைரஸ் நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. நிதியமைச்சர் தலைமையிலான குழு இதனை சரி செய்யும்.
6. நமக்கு சேவைகளை தொடர்ந்து வழங்கும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கெள்ளுங்கள். ஞாயிறன்று மாலை 5 மணிக்கு வீட்டின் மொட்டை மாடி அல்லது ஜன்னலுக்கு வந்து 5 நிமிடம் நில்லுங்கள். அப்போது கைகளை தட்டி, மணியடித்து உங்களது நன்றியுணர்வை வெளிப்படுத்துங்கள்.
7. உலகப்போர் 1 மற்றும் 2- ஏற்படுத்திய பாதிப்பை விட பல நாடுகளில் கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
8. கொரோனா சவாலை இந்தியா உறுதியுடன் எதிர்கொள்ளும். நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று எண்ணிக்கொள்ள வேண்டாம்.
9. கொரோனாவை சரி செய்ய மருந்து கிடையாது. நாம் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும். மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும்.
10. வழக்கம்போல சுதந்திரமாக நடமாடினால் நீங்கள் உங்களையும், உங்களது குடும்பத்தினரையும் ஆபத்தில் தள்ளப் பார்க்கிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.