This Article is From Mar 14, 2020

இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு ஏப்ரல் 30-வரை விமான சேவை நிறுத்தம்!

நேற்று முன்தினம் தூதரக மற்றும் வேலை வாய்ப்பு விசாக்களை தவிர்த்து மற்ற விசாக்களை ஏப்ரல் 15-ம்தேதி வரை நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு ஏப்ரல் 30-வரை விமான சேவை நிறுத்தம்!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது.

Mumbai:

இத்தாலி, பிரான்ஸ்,ஜெர்மனி, ஸ்பெய்ன், இஸ்ரேல், தென்கொரியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு ஏப்ரல் 30- வரையில் விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

முன்னதாக குவைத்திற்கு ஏப்ரல் 30-ம்தேதி வரையில் விமான சேவையை நிறுத்தி வைப்பதாக ஏர் இந்தியா அறிவித்திருந்தது. 

தற்போதைய அறிவிப்பின்படி, இத்தாலி, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகள் வழியே செல்லும் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஏர் இந்தியா அதிகாரிகள் கூறுகையில், 'இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெய்ன், இஸ்ரேல்,தென்கொரியா, இலங்கை ஆகிய நாடுகளுக்கு கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக விமானப் போக்குவரத்து சேவை நிறுத்தி வைக்கப்படுகிறது' என்று தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் தூதரக மற்றும் வேலை வாய்ப்பு விசாக்களை தவிர்த்து மற்ற விசாக்களை ஏப்ரல் 15-ம்தேதி வரை நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நிலைமை சீரடையும் வரையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் 64 பேர் இந்தியர்கள். 16 பேர் இத்தாலி நாட்டை சேர்ந்தவர்கள். ஒருவர் கனடா நாட்டு குடிமகன். 

இந்த 81 பேருடன் தொடர்பிலிருந்தவர்களையும் மத்திய சுகாதாரத்துறை கண்டுபிடித்து, அவர்களையும் கண்காணித்து வருகிறது. இதன் அடிப்படையில் சுமார் 4 ஆயிரம் பேரின் உடல்நிலை ஆய்வு செய்யப்படுகிறது. 

கொரோனா பாதித்திருக்கும் என்ற சந்தேகத்தின் பேரில் 42,296 பயணிகளிடம் மத்திய அரசு ஆய்வு மேற்கொண்டது. இதில் 2,559 பேருக்கு கொரோனா தாக்கியதற்கான அறிகுறிகள் காணப்பட்டன. அவர்களில் 17 வெளிநாட்டவர் உள்பட மொத்தம் 522 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்கள். 

.