இந்தியாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 110-ஆக உயர்ந்துள்ளது.
ஹைலைட்ஸ்
- ஐரோப்பிய நாடுகளில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது இத்தாலி
- 25 ஆயிரம்பேருக்கு இத்தாலியில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
- இந்தியாவில் இத்தாலி சுற்றுலா பயணிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஐரோப்பிய நாடான இத்தாலியில் 24 மணிநேரத்தில் 368 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலியில் கொரோனாவால் மொத்தம் 1,809 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த அந்நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகள், நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,747-ஆக உள்ளதென்று தெரிவித்தனர்.
ஒரே நாளில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,590-ஆக அதிகரித்தது.
உலக சுகாதார நிறுவனம் கொரோனாவை தொற்று நோயாக அறிவித்தது. இதையடுத்து கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் உள்ளிட்டோர், ரோமின் வாடிகன் நகரை விட்டு நேற்று வெளியேறினர்.
இதற்கிடையே பிரான்ஸில் உயிரிழப்பு 127-ஆக அதிகரித்துள்ளது. 5,423 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் தாக்குதல் அதிகரித்துள்ளது. கொரோனாவின் மையப்புள்ளி சீனாவிலிருந்து நகர்ந்து ஐரோப்பாவில் நிலை கொண்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் வெள்ளியன்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 110-ஆக உள்ளது. முன்னெச்சரிக்கையாக பல்வேறு மாநிலங்களில் மக்கள் கூடும் சினிமா தியேட்டர், ஹால், ஜிம், பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் நெருக்கடியான சூழலை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது.