This Article is From Mar 11, 2020

“கொரோனாவால் இத்தாலியில் சிக்கியுள்ள 55 தமிழக மாணவர்கள்!”- மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

Coronavirus: இந்திய விமானப் படையின் சி-17 குளோப்மாஸ்டர் விமானம், 58 இந்தியர்களை அந்நாட்டிலிருந்து தாயகம் கொண்டு வந்தது

“கொரோனாவால் இத்தாலியில் சிக்கியுள்ள 55 தமிழக மாணவர்கள்!”- மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

Coronavirus: முன்னதாக கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய சீனாவின் உஹான் மாகாணத்திலிருந்து 76 இந்தியர்கள் மற்றும் 36 வெளிநாட்டினரை இந்தியா, தாயகம் கொண்டு வந்தது. 

ஹைலைட்ஸ்

  • இதுவரை 100 நாடுகளை பாதித்துள்ளது கொரோனா
  • சீனாவின் உஹான் நகரிலிருந்து கொரோனா பரவத் தொடங்கியது
  • இந்தியாவில் 58 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி

கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் புதிதாக 11 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 58-ஐத் தொட்டுள்ளது. உலக அளவில் 100 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலும் கொரோனாவின் பாதிப்பு அதிகம் இருப்பதனால், மத்திய அரசு அதைத் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. இன்று காலை ஈரானிலிருந்த 58 இந்தியர்களை விமானம் மூலம் தாயகம் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. இந்நிலையில் இத்தாலி நாட்டில் உள்ள 55 தமிழக மாணவர்களை, இந்தியா மீட்டு வர இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர், டாக்ரட் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து ராமதாஸ், தனது ட்விட்டர் பக்கத்தில், “சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரசால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலி நாட்டின் மிலன் நகரில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 55 பேரை மீட்டு தாயகம் அழைத்து வர மத்திய வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! 

இத்தாலியில் தமிழக மாணவர்களுக்கு, ‘கொரோனா பாதிப்பு இல்லை' என்ற சான்றிதழ் கிடைப்பதில் ஏற்படும் தாமதம் தான் தாயகம் திரும்ப முடியாததற்குக் காரணமாகும். உடனடியாக அவர்களுக்கு மருத்துவ ஆய்வு நடத்தி சான்றிதழ் கிடைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார். 

ஈரானில் கொரோனா வைரஸ் காரணமாக 200 பேர் இறந்துள்ள நிலையில், இந்திய விமானப் படையின் சி-17 குளோப்மாஸ்டர் விமானம், 58 இந்தியர்களை அந்நாட்டிலிருந்து தாயகம் கொண்டு வந்தது. முன்னதாக கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய சீனாவின் உஹான் மாகாணத்திலிருந்து 76 இந்தியர்கள் மற்றும் 36 வெளிநாட்டினரை இந்தியா, தாயகம் கொண்டு வந்தது. 

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்த 8.74 லட்சம் பேரிடம் கொரோனா குறித்த சோதனை செய்யப்பட்டது எனக் கூறியுள்ளார். அதேபோல மத்திய அரசு தரப்பு, எந்த வெளிநாட்டுக் கப்பலும் இந்தியத் துறை முகங்களில் நிறுத்த அனுமதி கொடுக்கப்போவதில்லை என்றும் சொல்லப்படுகிறது. 

.