This Article is From Mar 14, 2020

''கொரோனாவை தடுக்க இணைந்து பணியாற்ற தயார்'' - பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்றது பாகிஸ்தான்!!

கொரோனாவை எதிர்த்துப் போராட சார்க் நாடுகள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று அழைப்பு விடுத்திருந்தார். இதனை சார்க் நாடுகளின் தலைவர்கள் ஏற்றுள்ளனர். இது இந்தியாவின் ராஜரீதியிலான நடவடிக்கைக்கு வெற்றியாக பார்க்கப்படுகிறது.

''கொரோனாவை தடுக்க இணைந்து பணியாற்ற தயார்'' - பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்றது பாகிஸ்தான்!!

பிரதமர் மோடியின் அழைப்புக்கு பாகிஸ்தான் பதில் அளித்துள்ளது.

ஹைலைட்ஸ்

  • மோடியின் அழைப்பை சார்க் நாடுகளின் தலைவர்கள் ஏற்றுள்ளனர்
  • கொரோனா வைரஸை சார்க்நாடுகள் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்கிறார் மோடி
  • இந்தியாவில் கொரோனா வைரசுக்கு 2 பேர் பலியாகியுள்ளனர்
New Delhi:

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை சார்க் நாடுகள் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்றும், இதுதொடர்பாக சார்க் நாடுகளின் தலைவர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தால் என்றும் பிரதமர் மோடி விடுத்துள்ள அழைப்பை பாகிஸ்தான் ஏற்றுள்ளது. கொரோனாவை தடுக்க இணைந்து பணியாற்றத் தயார் என்று அந்நாடு இன்று அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது-

கொரோனா வைரஸை பிராந்திய மற்றும் உலகளவில் இணைந்து எதிர்கொள்வது என்பது அவசியமாக உள்ளது. இந்திய பிரதமர் சார்க் நாடுகள் இணைந்து இந்த பிரச்னையை எதிர்கொள்ள வேண்டும் என அழைப்பபு விடுத்திருந்தார். இதுதொடர்பாக சுகாதார அமைச்சகத்தை நாங்கள் தொடர்பு கொண்டோம். தனது அண்டை நாடுகளுக்கு உதவிசெய்ய பாகிஸ்தான் தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் கொரோனா வைரஸை எதிர்கொள்வது தொடர்பாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தலைமையில் அவசரக்கூட்டம் நடைபெற்றது. 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை எட்டியுள்ளது. 1.30 லட்சம்பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சார்க் நாடுகள் ஒன்றிணைந்து கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி நேற்று அழைப்பு விடுத்திருந்தார். 

சார்க் அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், மாலத்தீவுகள், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
 

.

இந்த நிலையில் மோடியின் அழைப்பை சார்க் நாடுகளின் தலைவர்கள் ஏற்று பதில் அளித்துள்ளனர். பூடான் பிரதமர் தனது ட்விட்டர் பதிவில், 'பிராந்தியத்தில் பங்கு வகிக்கும் நாடு என்கிற அடிப்படையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நேரத்தில் பணியாற்ற வேண்டும். கொரோனா வைரஸால் பொருளாதாரத்தில் நலிந்த நாடுகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. எனவே அனைவரும் ஒத்துழைப்புடன் செயல்படுவது அவசியம்' என்று தெரிவித்துள்ளார்.
 

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, 'மிகச் சிறப்பான ஆலோசனையை வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி. கொரோனா தொடர்பான வீடியோ கான்பரன்ஸிங் ஆலோசனையில் பங்கேற்க நாங்கள் தயார். எங்களின் சிறந்த தீர்வுகளை சக நாடுகளுக்கு தெரியப்படுத்துகிறோம். அவர்களிடம் இருந்தும் நாங்கள் கற்றுக் கொள்ள தயாராக உள்ளோம்' என்று கூறியுள்ளார். 
 

இந்தியாவில் 80 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. சார்க் நாடுகளில் 126 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் 20-பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. 

இந்தியாவை தவிர்த்து மற்ற சார்க் நாடுகளில் கொரோனாவால் உயிரிழப்பு ஏற்படவில்லை. 

இந்தியாவில் வியாழன் அன்று கர்நாடக மாநிலம் கலபுராகி மாவட்டத்தை சேர்ந்த 76 வயது முதியவர் ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். 

அடுத்ததாக நேற்றிரவு டெல்லியை சேர்ந்த 68 வயது மதிப்புடைய பெண் ஒருவர் பலியானார்.

தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு இந்தியாவின் நில எல்லைகளை மூடியுள்ளது. தூதரக, வேலை வாய்ப்பு விசாக்களை தவிர்த்து மற்ற விசாக்களுக்கு ஏப்ரல் 15 வரையில் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. 

பல்வேறு மாநிலங்களில் திரையரங்குகள், பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பெங்களூருரில் ஏராளமான ஐ.டி. நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. 

சீனாவின் வுஹான் நகரின் மார்க்கெட்டில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை கதிகலங்கச் செய்து வருகிறது.


 

.