நாடு முழுவதும் ஏப்ரல் 14-ம்தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.
கொரோனா பாதிப்பால் சென்னையில் பெரும்பாலான உணவகங்கள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி, ஜொமேட்டோ ஆகியவை செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இருப்பினும் இந்த நிறுவனங்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, காலை உணவு டெலிவரியை காலை 7 முதல் 9.30-க்குள்ளும், மதிய உணவு டெலிவரியை பகல் 12 முதல் மதியம் 2.30 மணிக்குள்ளும், இரவு உணவு டெலிவரியை மாலை 6 -லிருந்து இரவு 9 மணிக்குள்ளும் முடித்துக் கொள்ள வேண்டும்.
ஸ்விக்கி, ஜொமேட்டோ நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதிகள் போலீசாரின் அனுமதி சீட்டை பெற்றிருக்க வேண்டும். மேலும், பிரதிநிதிகளின் உடல் நிலை நாள்தோறும் சோதிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
முன்னதாக கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் ஆன்லைன் உணவு ஆர்டர் நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதனால் ஸ்விக்கி, ஜொமேட்டோவை பயன்படுத்துவோர் ஏமாற்றம் அடைந்தனர். பெரும்பாலான உணவு கடைகள் அடைக்கப்பட்டிருக்கின்றன.
அதே நேரத்தில் பார்சல் வாங்க வேண்டும் என்றாலும், அங்கு மக்கள் கூட்டத்தால் கொரோனா பரவுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
உணவகங்களை தேடி வெளியே அலைந்தாலும், காவல்துறையினர் கெடுபிடி செய்வதாக புகார்கள் எழுகின்றன. இந்த சூழலில் கட்டுப்பாடுகளுடன் ஆன்லைன் உணவு ஆர்டர் நிறுவனங்கள் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது.