கடந்த வெள்ளிக்கிழமை வாக்கில் அவரின் உடல் நலம் தேறிவிடும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து காய்ச்சல் அதிகமாக இருப்பதால் ஓய்வில்தான் இருக்க உள்ளாராம்.
ஹைலைட்ஸ்
- மார்ச் 27-ல் போரிஸுக்கு கொரோனா இருப்பது தெரிந்தது
- உலகத் தலைவர்களில் போரிஸுக்குத்தான் கொரோனா தொற்று ஏற்பட்டது
- பரிசோதனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ஜான்சன்
London: பிரிட்டன் நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்குக் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி 10 நாட்கள் கடந்துள்ள நிலையில், பரிசோதனைகளுக்காக தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் 27 ஆம் தேதி தனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக தெரிவித்தார் ஜான்சன். பின்னர் வீட்டில் அவரே, தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை வாக்கில் அவரின் உடல் நலம் தேறிவிடும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து காய்ச்சல் அதிகமாக இருப்பதால் ஓய்வில்தான் இருக்க உள்ளாராம்.
“பிரதமர் போரிஸ் ஜான்சனின் மருத்துவர்கள் அறிவுறுத்தியதின்படி, இன்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இது முன்னெச்சரிக்கையாக எடுக்கப்படும் நடவடிக்கைதான்,” என்று இங்கிலாந்து அரசு தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.
உலகத் தலைவர்களில் ஜான்சனுக்குத்தான் முதன்முதலாக கொரோனா வைரஸ் தொற்று வந்துள்ளது. அதேபோல இங்கிலாந்து சுகாதாரத் துறை அமைச்சர் மேட் ஹேன்காக்கிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர் உடல்நலம் தேறி மீண்டும் பணியைத் தொடங்கியுள்ளார்.
ஜான்சனால் தனது பணிகளை செய்ய முடியவில்லை என்றால், வெளியுறவுத் துறை அமைச்சர் டோமினிக் ராப், அவரின் பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.
தனது உடல் நலம் குறித்து ஜான்சன், “நான் தற்போது நன்றாகவே உணர்கிறேன். 7 நாள் சுய தனிமைப்படுத்துதலை முடித்த பின்னரும் எனக்கு சில நோய் அறிகுறிகள் இருக்கின்றன.
எனவே அரசு மற்றும் மருத்துவர்களின் அறிவுரைப்படி, நோய் அறிகுறிகள் மறையும் வரை தொடர்ந்து தனிமைப்படுத்துதலில் இருப்பேன்,” என்றுள்ளார்.