Coronavirus Outbreak Updates: சீனாவில் கொரோனா வைரஸால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே வருகின்றது. அச்சமூட்டும் வகையில் தற்போதுவரை சீனாவில் இந்த கொரோனா நோய் தொற்றால் 490 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹூபே மாகாணத்தில் இருந்து வந்த தகவலின்படி கடந்த ஒரு சில நாட்களில் மட்டும் 65 பேர் இறந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கொரோனா நோய் தொற்று சீனா மட்டுமின்றி சுமார் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 'உலக சுகாதார அவசரநிலையை' பிரகடனம் செய்துள்ளது WHO என்று அழைக்கப்படும் உலக சுகாதார அமைப்பு. இதனால் உலகில் உள்ள பல நாடுகள் தங்கள் நாட்டு மக்கள் சீனா செல்வதற்கு முழு தடையை விதித்ததோடு சீனாவிற்கான விமான சேவைகளையும் முற்றிலும் நிறுத்தியுள்ளது.
இந்த சூழ்நிலையில் செவ்வாயன்று ஹாங்காங், தனது நாட்டில் கொரோனா நோய் தொற்றால் ஒருவர் இறந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டிற்குப் பிறகு சீனாவைத் தவிர இந்த நோய் தொற்றால் மற்றொரு நாட்டில் ஒருவர் இறந்திருப்பது மக்களை பீதியடையச் செய்துள்ளது.
தற்போது நிலவி வரும் இந்த அசாதாரண சூழ்நிலையில், கடந்த ஜனவரி 15 ஆம் தேதிக்குப் பின்னர் சீனாவிற்கு வழங்கப்பட்ட அனைத்து விசாக்களையும் ரத்து செய்துள்ளது இந்திய அரசு.