This Article is From Mar 21, 2020

"சீனா மறைத்ததால் உலகமே..."- கொரோனா வைரஸ் விவகாரத்தில் கொதித்த டிரம்ப்!!

சீனாவுக்கு எதிராக எதாவது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேட்டதற்கு டிரம்ப், எந்த பதிலையும் சொல்லவில்லை.

கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் குறித்து, 29 வயது சீன மருத்துவர் லி வென்லியாங், முதன்முறையாக டிசம்பர் 31 ஆம் தேதி, சமூக வலைதளத்தில் பதிவிட்டார்

ஹைலைட்ஸ்

  • சீனாவின் உஹான் நகரத்தில்தான் கொரோனா வைரஸ் உருவானது
  • தற்போது சீனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது
  • அமெரிக்காவிலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது கொரோனா
Washington:

தற்போது உலகில் மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பது கொரோனா வைரஸ். இது குறித்து சீனா, முதற்கட்ட தகவல்களை மறைத்ததால் தற்போது உலகமே மிகப் பெரிய விலையைக் கொடுத்து வருகிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். 

டிரம்ப், “கொரோனா வைரஸ் குறித்து நமக்குப் பல மாதங்களுக்கு முன்னரே தகவல் தெரிந்திருந்தால் உதவியாக இருந்திருக்கும். சீனாவின் ஒரே பகுதியில் மட்டும் அனைத்தையும் கட்டுப்படுத்தியிருக்க முடியும். 

சீனா செய்த செயலுக்கு மொத்த உலகமும் பெரிய விலையைக் கொடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் குறித்த தகவல்களைச் சொல்லாமல் இருந்ததனால் உலகமே மிகப் பெரிய விலையைக் கொடுத்து வருகிறது,” என்று கொரோனா வைரஸ் பரவலுக்குச் சீனாவின் பங்கு குறித்துக் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்தார். 

முன்னதாக அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு கவுன்சில், சீனாவுக்கு எதிராக, “கொரோனா வைரஸ் குறித்த முதற்கட்ட தகவல்களைச் சொல்லாமல் மறைத்தது சீன கம்யூனிஸ்ட் கட்சி. அதைப் பற்றி வெளியே பேசிய மருத்துவர்களையும் தண்டித்தது. இதனால் சீனாவில் இருக்கும் மற்றும் சர்வதேச வல்லுநர்களை கொரோனா குறித்துத் தெரியாமல் பார்த்துக் கொண்டது,” என்று குற்றம் சாட்டியது.

இது பற்றி டிரம்ப், “எல்லோருக்கும் இது தெரியும்,” என்றார். 

அதே நேரத்தில் சீனாவுக்கு எதிராக எதாவது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேட்டதற்கு டிரம்ப், எந்த பதிலையும் சொல்லவில்லை.

கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் குறித்து, 29 வயது சீன மருத்துவர் லி வென்லியாங், முதன்முறையாக டிசம்பர் 31 ஆம் தேதி, சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இப்படி அவர் வெளியிட்ட தகவலுக்காக உள்ளூர் காவலர்களால் எச்சரிக்கப்பட்டார். பின்னர் அவர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாகவே இறந்துவிட்டார். 

கொரோனா வைரஸ், 145 நாடுகளைப் பாதித்துள்ளது. சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 9,000 பேர் உயிரிழந்துள்ளனர். 

.