Read in English
This Article is From May 19, 2020

தேசிய அளவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது! முக்கியத் தகவல்கள்!!

58,802 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை 39,174 பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement
இந்தியா Posted by
New Delhi:

தேசிய  அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது ஒரு லட்சத்தினை கடந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, 1,01,139 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 4,970 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். இதுவரை நாடு முழுவதும் 3,100 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் சற்று ஆறுதல் அளிக்கக்கூடிய செய்தியாக குணமடைந்தோரின் எண்ணிக்கையானது 40 ஆயிரத்தினை நெருங்கிக்கொண்டிருக்கிறது என்பதாகும். 58,802 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை 39,174 பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட முழு முடக்க நடவடிக்கையானது தற்போது இம்மாத இறுதிவரை நான்காவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், தளர்வுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லி, பெங்களூர், ஹைதராபாத் போன்ற முக்கிய நகரங்களில் பொது போக்குவரத்து மற்றும் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. தொற்றால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தினை மீட்டெடுக்க அரசு இந்த தளர்வுகளை அனுமதித்துள்ளது.

  • இந்தியாவின் கொரோனா தொற்றை சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியா 7.1 சதவிகிதம் கொரோனா நோயாளிகளை கொண்டு உலக அளவில் 60வது இடத்தில் உள்ளது என மத்திய சுகாதாரத்துறை சமீபத்தில் தெரிவித்திருந்தது. எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னேற்றமான முடிவினையே கொடுத்திருக்கிறது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.
  • “தொற்று நோய் பரவலை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளை இந்தியா சரியான நேரத்தில் மேற்கொண்டுள்ளது. தற்போது உலகளாவிய ஒத்துழைப்பு தேவை. அரசாங்கங்கள் மற்றும் தொழில்கள் ஆபத்தினை எதிர்கொண்டு உள்ளது. ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியை அதிகரித்து அவற்றின் பலன்களை அனைவருக்கும் கிடைக்க செய்ய வேண்டும்.“ என உலக சுகாதார அமைப்பின் 73 வது கூட்டத்தில் சுகாதார அமைச்சர் கருத்தினை தெரிவித்திருந்தார்.
  • புலம் பெயர் தொழிலாளர்கள் ஏழு நாட்கள் பரிசோதனைக்கு பிறகு அவர்களின் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என அரசு சமீபத்தில் குறிப்பிட்டிருந்தது. மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட முழு முடக்க நடவடிக்கை காரணமாக பல்வேறு மாநிலங்களில் புலம் பெயர் தொழிலாளர்கள் சிக்கித் தவித்தனர். தற்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் மேற்குறிப்பிட்ட புதிய வழிமுறைகளை கொரோனா பரிசோதனைக்கு வழங்கியுள்ளது.
  • நாட்டில் அதிக அளவு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இம்மாநிலத்தில் 2,033 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் மூலமாக மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 35 ஆயிரத்தினை கடந்துள்ளது.
  • மகாராஷ்டிரா மாநிலத்தில் மத்திய அரசு அனுமதித்த தளர்வுகள் அமல்படுத்தப்படவில்லை. “நாம் தற்போது தளர்வுகளை அமல்படுத்தினால் தொற்று பரவல் அதிகரிக்க நேரிடும். தற்போது உள்ள கட்டுப்பாடுகள்தான் தொற்று பரவலைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது. இதை தளர்த்தினால் தொற்று பரவல் சங்கிலியை உடைக்க முடியாது” என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே தெரிவித்துள்ளார்.
  • இந்தியாவில் நேற்று கலை தரவுகளின்படி முன்னெப்போதும் இல்லாத அளவில் ஒரே நாளில் 5,242 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டனர். இந்நிலையில் 96,169 என்கிற அளவிலிருந்து தற்போது ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்காளாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
  • இதே போல தேசிய தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்ட 200 பேருடன் சேர்த்து மொத்தமாக 10 ஆயிரத்தினை கடந்துள்ளது.
  • நாட்டில் கொரோனா தொற்றுடன் சேர்த்து ஆம்பன் புயல் பாதிப்புகளையும் எதிர்கொள்ள மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்கள் தயாராகி வருகின்றன. முன்னதாக பிரதமர் இது குறித்து நேற்று கலந்தாலோசனை நடத்தினார். இந்த புயல் நாளை இரு மாநிலங்களுக்கிடையில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • சர்வதேச அளவில், எதிர்பார்த்ததைவிட கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்க நீண்ட காலமாகும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. “தற்போது மருத்துவப்பொருட்கள், உணவு மற்றும் பொருளாதார நடவடிக்கையை நீண்ட காலத்திற்கு சீராக இயக்க வேண்டும் .இந்த நெருக்கடியிலிருந்து வரக்கூடிய வடுவைத் தாண்டி அனைவருக்கும் இந்த வளமான எதிர்காலத்தை தொடர்ந்து கட்டமைக்க விரும்புகிறோம்,"  என ஐஎம்எப் தலைவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
  • உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 48 லட்சத்தினை கடந்து 50 லட்சத்தினை நெருங்கிக்கொண்டிருக்கின்றது. இதுவரை மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
Advertisement