இந்தியாவில் கொரோனா நிலவரம்: 4.4 லட்சம் பேர் பாதிப்பு; 14,000 பேர் உயரிழப்பு!
ஹைலைட்ஸ்
- கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,933 பேர் கொரோனாவால் பாதிப்பு
- நேற்று ஒரே நாளில் 312 பேர் உயிரிழப்பு
- மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 4,40,215 உயர்வு
New Delhi: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,933 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 4,40,215 உயர்ந்துள்ளது. இதேபோல், நேற்று ஒரே நாளில் 312 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையும் 14,011ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
அதிக உயிரிழப்பு எண்ணிக்கையுடன், கொரோனா பாதிப்பில் இரண்டாவது மாநிலமாக டெல்லி உருவெடுத்துள்ளது. எனினும், தலைநகரில் நிலைமை படிப்படியாக சீராகி வருவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதனிடையே, கோவாவில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டில் அதிக பாதிப்பு கொண்ட முதல் மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அதைத்தொடர்ந்து, டெல்லி, தமிழ்நாடு, குஜராத், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன. இதுவரை 2,48,190 கொரோனா நோயாளிகள் குணமைடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைபவர்களின் விகிதமானது 56.37 சதவீதமாக அதிகரித்துள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 10 நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.
மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 1,36,796 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் மட்டும் 3,721 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், மும்பையில் மட்டும் 67,586 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், தானேவில் 25,390 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 113 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 6,283ஆக அதிகரித்துள்ளது.
டெல்லியில் கொரோனா பரிசோதைன மேற்கொள்பவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால், உடனடியாக அந்த நபர் அரசு சிகிச்சை மையத்திற்கு அழைத்து வரப்பட்டு மருத்துவ குழுவினர் அவர் வீட்டிலே தனிமைப்படுத்தக்கொள்ள தகுதியானவரா என்று சோதிக்கப்படுகிறார். தலைநகரில் 62,655 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,233 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில், 2,710 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், சென்னையில் மட்டும், 1,500 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 62,087 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை குறைக்கும் விதமாக சென்னையை தொடர்ந்து, மதுரையிலும் ஜூன்24ம் தேதி முதல் 30ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கர்நாடகா மருத்துவ கல்வி அமைச்சர் சுதாகரின் தந்தைக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவரது மனைவி, மகளுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கர்நாடகாவிலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை 9,399 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 142 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 138 பேர் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 3,310 ஆக அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக அரசு தரப்பு கூறும்போது, மொத்த கொரோனா பாதிப்பில் 89.5 சதவீதம் வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்தவர்கள் ஆவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 4.72 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 90.94 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.