This Article is From Jul 05, 2020

முதல் முறையாக ஒரே நாளில் நாடு முழுவதும் 24,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் நாடு  முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவாக 24,850 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதே போல 613 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

முதல் முறையாக ஒரே நாளில் நாடு முழுவதும் 24,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு!

ஹைலைட்ஸ்

  • நாடு முழுவதும் கொரோனா தொற்றால் 6,73,165 பேர் பாதிப்பு
  • 2,44,814 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
  • 19,268 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 6,73,165 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 2,44,814 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 4,09,083 பேர் குணமடைந்துள்ளனர். 19,268 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு  முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவாக 24,850 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதே போல 613 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் அதிகப்பட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 7,074 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மாநிலம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டு மொத்த பாதிப்பு 2 லட்சத்தினை கடந்துள்ளது.

தேசிய தலைநகரான டெல்லியை பொறுத்த அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,505 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இதன் காரணமாக ஒட்டு மொத்த பாதிப்பு 97 ஆயிரத்தினை கடந்துள்ளது. இதுவரை 3,004 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் சென்னையில் நாளை முதல் ஊரடங்குகளில் தளர்வுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் மதுரையில் இம்மாதம் 12 வரை கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.

அண்டை மாநிலமான கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,839 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளனர். 42 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஊரடங்கு என்கிற புதிய நடைமுறையை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது.  இதுவரை கர்நாடகாவில் 21,549 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 335 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்கு வங்கத்தினை பொறுத்த அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 743 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த பாதிப்பானது 21,231 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 736 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது கொல்கத்தா, தொற்றால் பாதிக்கப்பட்ட நகரங்களின் வரிசையில்  ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா உயிரிழப்புகளை தடுக்க, வரும் ஆகஸ்ட் 15 அன்று கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்ததை எதிர்கட்சிகள் விமர்சித்திருந்தன. சிபிஎம் கட்சியின் அகில இந்திய செயலாளர் சீதாராம் யெச்சூரி, “தடுப்பூசி கண்டு பிடிப்பதற்கான காலக்கெடு நிர்ணயிப்பது என்பது பொருத்தமற்றது.“ என கூறியிருந்தார். ஏறத்தாழ அதே கருத்தினை எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியாவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று மட்டும் 2,12,326 பேர் உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் கொரோன பாதிப்பு எண்ணிக்கை 1.12 கோடியாக அதிகரித்துள்ளது. 5.30 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

.