Coronavirus Cases, India:இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 9.68 லட்சத்தை கடந்தது!
New Delhi: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையானது 9.68 லட்சத்தை கடந்துள்ளது. இதுவரை இல்லாத அளவு கடந்த 24 மணி நேரத்தில் 32,695 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதேபோல், நேற்று ஒரே நாளில் 606 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 24,915 ஆக உயர்ந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக இதுவரை 6.1 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் வரிசையில் அமெரிக்கா மற்றும் பிரேசிலை தொடர்ந்து, இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
நாட்டில் 2வது நாளாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் பதிவாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 30,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் 29,000க்கும் அதிகமான வழக்குகள் பதிவாகியிருந்தன.
மிகுந்த பாதிக்குள்ளான மாநிலத்தில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 2.75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் 1.51 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 1.16 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு அதிகமுள்ள 5 மாநிலங்களாக மகாராஷ்டிரா (7,975), தமிழகம் (4,496), கர்நாடகா (3,176), ஆந்திர பிரதேசம் (2,432) மற்றும் உத்தர பிரதேசம் (1,659) உள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகம் உயிரிழப்பு ஏற்பட்டு 5 மாநிலங்களாக மகாராஷ்டிரா (233), கர்நாடகா (86), தமிழகம் (68), ஆந்திர பிரதேசம் (44) மற்றும் டெல்லி (41) உள்ளன.
130 கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில் கிட்டத்தட்ட 1.27 கோடி மாதிரிகள் இதுவரை சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. நேற்றைய தினம் அதிகபட்சமாக 3,26,826 மாதிரிகள் சோதனைப்படுத்தப்பட்டுள்ளன.
உலகளவில் 576,000 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். பல்வேறு நாடுகளிலும் தொற்று பரவலை குறைப்பதற்கு மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 67,632 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 10 நாட்களில் மட்டும், ஒவ்வொரு 24 மணிநேரத்திற்கும் 55,000 முதல் 60,000 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர்.