டெல்லியில் கொரோனா பாதிப்பு இரு மடங்காக அதிகரிப்பது 11 நாட்களாக குறைந்துள்ளது.
ஹைலைட்ஸ்
- டெல்லியில் மொத்தம் 5,532 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது
- 15 பேருக்கு மட்டுமே வென்ட்டிலேட்டர் தேவைப்படும் அளவுக்கு பாதிப்பு உள்ளது
- கொரோனா வைரஸ் நீண்டகாலத்துக்கு இருக்கும் என்கிறார் டெல்லி அமைச்சர்
டெல்லியில் 5,532 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தாலும் அவர்களில் 15 பேருக்கு மட்டும்தான் வென்ட்டிலேட்டர் வசதி தேவைப்படுவதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்தாலும் வெளிநாடுகளில் ஏற்பட்டதைப் போன்ற கொத்துக் கொத்தான மரணங்கள் ஏதும் ஏற்படவில்லை. குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வென்ட்டிலேட்டர் உதவி தேவைப்படுகிறது.
டெல்லியின் சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெய்ன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது -
டெல்லியில் நிலைமை கட்டுப்பாட்டில் இருக்கிறது. மொத்தம் 5,532 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் 15 பேருக்கு மட்டுமே வென்ட்டிலேட்டர் வசதி தேவைப்படுகிறது.
கொரோனா பரவுதல் இரட்டிப்பாக மாறுவது 11 நாட்களாக குறைந்திருக்கிறது. மொத்தம் 65 பேர் உயிரிழந்துள்ளனர். 1,542 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நாங்கள் மிகுந்த கவனமாக இருக்கிறோம் நாம் இந்த கொரோனா வைரசுடன் சில காலம் அல்லது நீண்ட காலத்திற்கு வாழவேண்டி இருக்கும். விதிமுறைகளை பின்பற்றி மாஸ்க் அணிந்து, சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்.
கொரோனா டெல்லியில் பரவாமல் இருப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் நாங்கள் மிகுந்த கவனமாக இருக்கிறோம். ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவின் நிலைமை நல்லபடியாகத்தான் இருக்கிறது.
டெல்லியில் விதிப்படிதான் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. கூட்டம் கூடியது குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தி வருகிறோம். 2-3 நாட்களில் நிலைமை சீரடைந்து விடும்.
மத்திய பிரதேச தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சிறப்பு ரயில் இன்று டெல்லியில் இருந்து புறப்படும். வெளி மாநில தொழிலாளர்கள் விஷயம் தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். அந்த மாநிலங்களும் தொழிலாளர்களை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.