இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 64,500 பேர் பாதிப்பு; 1,092 பேர் உயிரிழப்பு!
New Delhi: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் 64,500 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 1,092 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 15 நாட்களாக நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகம் பதிவாகி வருகிறது. நாட்டில் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 27,67,273 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையானது 52,889ஆக அதிகரித்துள்ளது.
எனினும், இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 20,37,870 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைபவர்களின் விகிதமானது 73.64 சதவீதமாக உள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய சேரிப்பகுதியான தாராவியில் கொரோனா வைரஸால் புதிதாக நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,676 ஆக உயர்ந்துள்ளது. ஆக.3ம் தேதியன்று தாராவியில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது. எனினும், அதன் பின்னர் தினமும் ஒற்றை இலக்க எண் அளவிலே பாதிப்பு பதிவாகி வருகிறது.
மத்திய பிரதேச உயர் கல்வி அமைச்சர் மோகன் யாதவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக யாதவ் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, "கொரோனா சோதனையில் பாதிப்பு இருப்பது உறுதியானது. அதனால் நான் அரவிந்தோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். பாபா மகாகலின் அருளால் நான் ஆரோக்கியமாக இருக்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தினசரி பாதிப்பு எண்ணிக்கையை விட, குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால், டெல்லியில் குணமடைபவர்ளின் விகிதமானது 90 சதவீதமாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, தமிழகம் மற்றும் உத்தர பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் அதிகளவிலான கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
உலகளவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து, இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
கடந்த ஜன.30ம் தேதி கேரளாவில் முதல் கொரோனா பாதிப்பு பதிவான நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 26 லட்சத்தை எட்டுவதற்கு 200 நாட்கள் எடுத்துள்ளது. மே.19ம் தேதியன்று பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்தது. தொடர்ந்து, ஜூலை மத்தியில் 6 லட்சத்தை கடந்த பாதிப்பு எண்ணிக்கை அம்மாத இறுதியில் 16 லட்சத்தை கடந்தது.
பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை, 74வது சுதந்திர தினத்தன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது, மூன்று கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் இந்தியாவில் பல்வேறு கட்ட சோதனைகளில் உள்ளன என்றும், ஒரு தடுப்பூசி அங்கீகரிக்கப்படும்போது ஒவ்வொரு இந்தியருக்கும் சென்றடைவதை உறுதிசெய்யும் திட்டத்தை அரசு உறுதிபடுத்தியுள்ளது என்றும் கூறினார்.