இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் 66,999 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 23,96,637 ஆக உயர்ந்துள்ளது. எனினும், குணமடைபவர்களின் விகிதமானது 70.76 ஆக உள்ளது. நாட்டில் இதுவரை நோய்தொற்றால் பாதிக்கப்பட்ட16,95,982 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 942 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, நாட்டில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 47,033 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
நாட்டில் தொற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா தொடர்கிறது, அதைத் தொடர்ந்து தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, தமிழகம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அதிக பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளன.
மகாராஷ்டிராவில் இதுவரை 5,48,313 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளளனர். இதில் 1,47,820 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் 13,408 குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் மாநிலத்தில் 12,712 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அங்கு உயிரிழப்பு எண்ணிக்கையானது 18,650 ஆக உள்ளது.
இரண்டாவது மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமான தமிழ்நாட்டில் புதன்கிழமை 5,871 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 119 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன, இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,14,520 ஆக உள்ளது.
ஆந்திராவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2.50 லட்சத்தை தாண்டியுள்ளது, நேற்றை தினம் மட்டும் 9,597 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் இதுவரை 2,54,146 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் ஒரே நாளில் 7,883 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இரண்டு லட்சத்தை எட்டியுள்ளது. 80,000க்கும் மேற்பட்டார் கொரோனா வைரஸூக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் பரவியதோடு, இதுவரை 7.49 லட்சம் பேர் அதனால் உயிரிழந்துள்ளனர். 2.06 கோடிக்கும் அதிகமான மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் மிக மோசமான பாதிப்பை கொண்ட அமெரிக்காவில் 1,63,370 உயிரிழப்புகள் மற்றும் 5,085,821 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தகவல்கள் தெரிவித்துள்ளன.