இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்தது; 20,000 பேர் உயிரிழப்பு!
ஹைலைட்ஸ்
- கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்தது
- கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், புதிதாக 22,252 பேர் பாதிப்பு
- உயிரிழப்பு எண்ணிக்கையும் 20,160ஆக உயர்வு
New Delhi: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையானது 7 லட்சத்தை தாண்டியது. 6 லட்சத்தை எட்டி நான்கு நாட்களில் அடுத்த ஒரு லட்சத்தை எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், புதிதாக 22,252 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 467 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 7,19,665 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையும் 20,160ஆக உயர்ந்துள்ளது என சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுவரை மொத்தமாக கொரோனா பாதித்தவர்களில் 4,39,948 பேர் குணமடைந்துள்ளனர். தொடர்ந்து, குணமடைபவர்களின் விகிதமானது 61.13ஆக உயர்ந்துள்ளது.
நாட்டிலே அதிக பாதிப்பு கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அதைத்தொடர்ந்து, தமிழகம், டெல்லி, குஜராத், உத்தர பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன.
மகாராஷ்டிராவில் புதிதாக 5,368 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,11,987ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 204 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 9,206ஆக உள்ளது. மும்பையில் மட்டும், 1,201 பேர் உயிரிழந்துள்ளனர். மும்பையில் மட்டும் 85,326 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மார்ச்.2ம் தேதி முதல் பாதிப்பு ஏற்பட்டது முதல், 125 நாளுக்கு பிறகு டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,379 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 48 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 1,00,823 ஆக உயர்ந்துள்ளது. எனினும், மொத்த பாதிப்பில் 72,000க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் சென்னையில் மூன்று வாரங்கள் மொத்தமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது ஒரளவு பாதிப்பு குறைய வழிவகை செய்துள்ளது. தொடர்ந்து, 5 நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை 2,000ஐ கடந்த நிலையில், தற்போது 1,800க்கும் கீழ் உள்ளது. எனினும், மதுரை மற்றும் சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து காணப்படுகிறது. தமிழகத்தில் மொத்தமாக 1,14,978 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,571 பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகா தலைநகர் பெங்களூரில் மூன்று நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை 15.7 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடகாவில் 25,317 பேர் கொரோனாவால் பாதித்த நிலையில், பெங்களூரில் மட்டும் 10,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கவலையானது, பெங்களூரில் குறைந்த மீட்பு விகிதத்தை கொண்டுள்ளது. டெல்லியில் 71.7 சதவீதமாக உள்ள மீட்பு விகிதத்தை ஒப்பிடும் போது, கர்நாடகாவில் 14.7 சதவீதமாக உள்ளது. அதேநேரத்தில், சென்னையில் 62 சதவீதமாகவும், மும்பையில் 66.1 சதவீதமாகவும் உள்ளது.
அசாமின் குவஹாத்தியில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் அதிகரித்து வருவதற்கு மத்தியில், நகரத்தில் "முதல்-வகையான" வீட்டுக்கு வீடு கொரோனா வைரஸ் பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது. ஜூன் 15முதல் 4,000 புதிய வழக்குகள் அதிகரித்துள்ளது. அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது, 12,160 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 பேர் உயிரிழந்துள்ளனர்.