This Article is From Apr 23, 2020

WHO-க்கான நிதியை முடக்கும் அமெரிக்கா… கை கொடுக்கும் சீனா… பெரும் தொகை ஒதுக்கீடு!

“அமெரிக்கா, ஓராண்டில் WHO-க்கு 400 மில்லியன் முதல் 500 மில்லியன் டாலர் நிதியை ஒதுக்குகிறது"

WHO-க்கான நிதியை முடக்கும் அமெரிக்கா… கை கொடுக்கும் சீனா… பெரும் தொகை ஒதுக்கீடு!

"ஆனால், சீனாவோ 40 மில்லியன் டாலர் வரை மட்டுமே ஒதுக்குகிறது. சில நேரங்களில் அவ்வளவு கூட ஒதுக்குவதில்லை"

ஹைலைட்ஸ்

  • WHO கொரோனா விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக நடந்து கொண்டது: டிரம்ப்
  • WHO-க்கு அமெரிக்கா அளித்து வரும் நிதி நிறுத்தப்படுகிறது: டிரம்ப்
  • WHO-க்கு கூடுதலா 30 மில்லியன் டாலர் ஒதுக்கப்படுகிறது: சீனா
Beijing, China:

உலக சுகாதார அமைப்பான WHO, கொரோனா விவகாரத்தில் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டதாகவும், சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டி, அதற்கு தங்கள் அரசு ஒதுக்கும் நிதி நிறுத்தப்படும் என்று சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். 

இந்நிலையில் சீன அரசு, உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸை எதிர்த்துத் திறம்பட போராட வேண்டும் என்ற நோக்கில் 30 மில்லியன் டாலர் நிதியை ஒதுக்குவோம் என்று தெரிவித்துள்ளது. 

“முன்னதாக சீன அரசு, உலக சுகாதார அமைப்புக்கு 20 மில்லியன் டாலர் நிதியை ஒதுக்க முடிவெடுத்திருந்தது. தற்போது அதையும் சேர்த்துக் கூடுதலாக 30 மில்லியன் டாலர் ஒதுக்கப்படும். இதன் மூலம் உலக சுகாதார அமைப்பு, கொரோனா வைரஸுக்கு எதிராக வீரியமாக போராட முடியும்,” என்று சீனாவின் வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும், “இப்படி செய்வதன் மூலம் உலக சுகாதார அமைப்பின் மீது சீன அரசு, எந்தளவுக்கு நம்பிக்கை வைத்துள்ளது மற்றும் ஆதரவு அளிக்கிறது என்பதை வெளிப்படுத்த முடிகிறது” எனக் கூறியுள்ளார். 

முன்னதாக உலக சுகாதார அமைப்பு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய டிரம்ப், “அமெரிக்கா, ஓராண்டில் WHO-க்கு 400 மில்லியன் முதல் 500 மில்லியன் டாலர் நிதியை ஒதுக்குகிறது. ஆனால், சீனாவோ 40 மில்லியன் டாலர் வரை மட்டுமே ஒதுக்குகிறது. சில நேரங்களில் அவ்வளவு கூட ஒதுக்குவதில்லை. 

இப்படி இருந்தும் கொரோனா வைரஸ் விவகாரத்தில், அதன் வீரியம் குறித்து உலகத்துக்கு சொல்லாமல் மறைத்துவிட்டது உலக சுகாதார அமைப்பு. கொரோனா வைரஸ் விவகாரத்தை உலக சுகாதார அமைப்பு சரியாக கையாளவில்லை,” எனக் கூறி, அதற்குக் கொடுத்து வரும் நிதி முடக்கப்படும் என்று கூறி அதிர்ச்சி கொடுத்தார். 
 

.