This Article is From Apr 08, 2020

ஊரடங்கு நீட்டிப்பு? அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

கேரளா மற்றும் மகாராஷ்டிரா போன்ற சில மாநிலங்களில் அறிகுறி இல்லாதவர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும் நிலையில், வைரஸ் தொற்று இருப்பதை உறுதி செய்வதற்கே அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் என பெரும்பாலான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

ஹைலைட்ஸ்

  • The government is exploring reopening of sectors in a phased manner
  • Most officials say the priority is to ensure the virus is contained
  • Coronavirus cases have gone up to 5,194 in India
New Delhi:

அனைத்து மாநில முதல்வர்களுடனும் 2வது முறையாக வரும் சனிக்கிழமை வீடியோ காட்சி மூலம் கலந்தாலோசித்த பின்பு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏப்.14ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவை படிப்படியாக தளர்த்துவது குறித்து மாநில அரசுகளின் ஆலோசனையை கேட்டிருந்த நிலையில், அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுவார் என தெரிகிறது. 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் அதிகபட்சமாக 35 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 149 ஆக அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள தகவலில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,000ஐ கடந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

பொருளாதாரம் மற்றும் இதர அடிமட்ட துறைகள் மீண்டும் செயல்பட தொடங்குவதை உறுதிப்படுத்தும் விதமாக, படிப்படியாக கட்டுபாடுகளை தளர்த்தும் முடிவில் அரசு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், கொரோனா பரவல் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு மாநிலங்களும் கேட்டுக்கொண்டாலும், வேலையிழப்புகள், பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியம் உள்ளிட்டவை குறித்த பெரும் கவலை எழுந்துள்ளது. அதனால், அனைத்து துறைகளிலும் படிப்படியாக கட்டுபாடுகளை தளர்த்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. 

கடந்த மார்ச்.24ம் தேதி பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அறிவிப்பதற்கு முன்னதாகவே, சில மாநிலங்கள் ஏற்கனவே கட்டுபாடுகளை விதித்து, சமூக விலகல் குறித்த எச்சரிக்கைகளையும் விதித்தது என்பதை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். 

தொடர்ந்து, பள்ளி மற்றும் கல்லூரிகள் அடுத்த வாரம் முதல் மீண்டும் தொடங்கப்படாது என்று தெரிகிறது. இதுதொடர்பாக நேற்றைய தினம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறதோ, இல்லையோ அனைத்து கல்வி நிலையங்களிலும் விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என அமைச்சர்கள் குழு பரித்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதேபோல், பொதுமக்கள் அதிகம் கூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால், மத வழிபாட்டு தளங்களில் மற்றும் மத கூட்டத்திற்கு தடையை நீட்டிக்க வேண்டும் என்று அமைச்சர்கள் குழு வலியுறுத்தியுள்ளது. 

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், நடந்த இந்த அமைச்சரவை கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். அதேபோல், ஏப்.14ம் தேதிக்கு பின்னர் மத வழிபாட்டு தலங்கள், கல்வி நிலையங்களுடன், வணிக வளாகங்களை திறப்பதற்கும் அடுத்த நான்கு வாரத்திற்கு அனுமதி வழங்க கூடாது என்றும் பரிந்துரைத்துள்ளனர். 

கேரளா மற்றும் மகாராஷ்டிரா போன்ற சில மாநிலங்களில் அறிகுறி இல்லாதவர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும் நிலையில், வைரஸ் தொற்று இருப்பதை உறுதி செய்வதற்கே அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் என பெரும்பாலான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மகாராஷ்டிரா - 1018, தமிழ்நாடு - 690, டெல்லி - 576, தெலுங்கானா - 364, கேரளா - 336 உள்ளிட்ட மாநிலங்களில் அதிகமாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 
 

.