Coronavirus: பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து, வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். (File)
ஹைலைட்ஸ்
- ஊரடங்கை எப்போது தளர்த்துவது? மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை
- மாநிலங்களுக்கு இடையேயான சேவைகளுக்கு தடை நீடிக்கும் என தெரிகிறது.
- மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,447 ஆக அதிகரித்துள்ளது.
New Delhi: கொரோனா தொடர்பாக எந்த நேரத்திலும் என்னை தொடர்புக்கொள்ளலாம் என அனைத்து மாநில முதல்வர்களிடம் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை எப்போது தளர்த்துவது என்பது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்தியாவில், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்தமாக உயிரிழப்பு எண்ணிக்கை 239ஆக அதிகரித்துள்ளது. இதேபோல், மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,447 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு தழுவிய 21 நாள் ஊரடங்கை பிரதமர் மோடி அமல்படுத்தியிருந்தார். இந்நிலையில், வரும் ஏப்.14ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிவேகமாகப் பரவி வருகிறது. இதைத்தொடர்ந்து, அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இதனிடையே, ஒடிசா மற்றும் பஞ்சாபில் ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கூறும்போது, இது, கடந்த நூற்றாண்டுகளில் மனித இனம் பார்த்திராத அளவு மிகப்பெரும் அபாயமாகும். வாழ்க்கை எப்போதும் ஒரே போன்று இருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என மத்திய அரசுக்கு அளித்த கடிதத்தில், பீகார் அரசு தெரிவித்துள்ளது. எனினும், வெள்ள பாதிப்பு நடவடிக்கைகளுக்கும், கிராமப்புற கட்டுமானங்களுக்கு மட்டும் அது விலக்கு கோரியுள்ளது. பீகாரில் கடந்த வருடம் பெரும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அங்கு மறுகட்டுமான திட்டங்கள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன.
கடந்த ஏப்.2ம் தேதி மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்ட போது, ஊரடங்கு உத்தரவை படிப்படியாக தளர்த்துவது குறித்து மத்திய அரசும், மாநில அரசுகளும் ஒரு பொது திட்டத்தை வகுக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.
இந்த முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், அதில் பல மாற்றங்கள் இருக்கும் எனத் தகவல் தெரிவிக்கின்றன. அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து மாநிலங்களுக்கு இடையேயான சேவைகளுக்குத் தடை நீடிக்கும் எனத் தெரிகிறது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது, மாநிலங்களே ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தால், அது எந்த பலனையும் தராது. அதனால், நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசே முடிவு செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பில் டெல்லி 3வது இடத்தில் உள்ளது. முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் மகாராஷ்டிராவும், தமிழகமும் உள்ளது. ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டால் கூட, ரயில் அல்லது சாலை என எந்த வகையான போக்குவரத்தையும் அனுமதிக்கக்கூடாது" என்று கெஜ்ரிவால் வலியுறுத்தினார்.
இந்த வீடியோ கான்பரன்ஸ் நடந்த போது சுகாதார அமைச்சகம் ஒரு விளக்கக்காட்சியை திரையிட்டது. பின்னர் ஒவ்வொரு மாநில முதல்வர்களாக பிரதமர் மோடியுடன் பேசினர். அப்போது, பெரும்பாலான முதல்வர்கள், மாநிலங்கள் ஊரடங்கை அறிவிப்பதை விட, நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
வீட்டில் தயாரிக்கப்பட்ட, மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணிகளான முகக்கவசங்களை மாற்றாக பயன்படுத்தலாம் என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இதேபோல், 2 முகக்கவசங்களை வைத்து கொண்டு, ஒன்றை பயன்படுத்தும் போது, மற்றொன்றை துவைத்து காய வைத்து பயன்படுத்துவம் என மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்தது. நாட்டு மக்களுக்கு அந்த தகவலை தெரிவிக்கும் வகையில், பிரதமர் மோடியின் செயல்பாடு இன்று, இருந்தது.