தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஊரடங்கை மக்கள் கடைபிடிக்கவில்லை என புகார்கள் எழுகின்றன.
ஹைலைட்ஸ்
- நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது
- ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என தகவல்கள் வெளியானது
- ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்தியஅரசு முடிவுசெய்யும் என்கிறார் முதல்வர்
தமிழகத்தில் ஏப்ரல் 14-ம்தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதற்கு பின்னரும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்விக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
முதலில் வெளிநாடுகளை மட்டுமே தாக்கி அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று, இந்தியாவில் பரவத் தொடங்கியபோது மக்கள் அதனை முக்கிய பிரச்சினையாக எடுத்துக் கொள்ளவில்லை. உள்நாட்டில் ஆங்காங்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பின்னர், கொரோனா பரவல் சங்கிலியை உடைத்தெறியும் விதமாக கடந்த 22-ம்தேதி மக்கள் சுய ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார்.
இதன்படி அன்றைய தினம் மக்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரையில் வீட்டிலேயே இருந்தனர். இதற்கிடையே, ஊரடங்கை குறைந்தது14 நாட்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்றும் இதைச் செய்யத் தவறினால் ஏப்ரல் மாத இறுதியில் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழியும் என்றும் நுண்ணுயிரியியல் வல்லுநர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர்.
தமிழகத்தில் கடந்த 24-ம்தேதி செவ்வாயன்று மாலை முதல் ஊரடங்கு உத்தரவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதன்பின்னர் இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 21 நாட்கள் ஊரடங்கை இந்தியா கடைப்பிடிக்க வேண்டும் என்றும், இதைச் செய்யத் தவறினால் நாம் 21 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டியிருக்கும் என்று கூறினார்.
இதன் அடிப்படையில் கடந்த வாரம் புதன்கிழமையான 25-ம்தேதி முதற்கொண்டு ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.
8-வது நாளாக இன்று ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் நிலையில், கொரோனா சமூக பரவல் நிலைக்குச் செல்லவில்லை என்று அரசு கூறியுள்ளது.
அதே நேரத்தில் மத்திய அரசு ஊரடங்கை நீட்டிக்கும் என்று தகவல்கள் வெளியானது. இதனை மறுத்த அரசு, ஊரடங்கை நீட்டிக்கும் திட்டம் ஏதும் இல்லையென்று தெரிவித்தது.
தமிழகத்தில் தற்போது வரையில் 125 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேசிய அளவில் மகாராஷ்டிரா, கேரளாவுக்கு அடுத்தபடியாக தமிழகம் உள்ளது. இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் திடீர் ஆய்வு நடத்தினார். இதன்பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவரிடம், ஊரடங்கைத் தமிழக அரசு நீட்டிக்குமா என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு, ஏப்ரல் 14-ம் தேதிக்கு பின்னர் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு தான் இறுதி செய்யும் என்று தெரிவித்தார்.