This Article is From Apr 16, 2020

டெல்லியில் பீட்சா டெலிவரி செய்தவருக்கு கொரோனா; தனிமைப்படுத்தப்பட்ட 72 குடும்பத்தினர்!

Coronavirus: அந்த இளைஞருடன் தொடர்பில் இருந்த 20க்கும் மேற்பட்ட டெலிவரி செய்யும் நபர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Coronavirus: டெல்லியில் பீட்சா டெலிவரி செய்தவருக்கு கொரோனா; தனிமைப்படுத்தப்பட்ட 72 குடும்பத்தினர்!

ஹைலைட்ஸ்

  • டெல்லியில் பீட்சா டெலிவரி செய்தவருக்கு கொரோனா பாசிட்டிவ்
  • பீட்சா டெலிவரி செய்த 70க்கு மேற்பட்ட குடும்பத்தினர் பீதியில் உள்ளனர்
  • பீட்சா டெலிவரி செய்த அந்த இளைஞருக்கு எந்த பயண பின்னணியும் இல்லை.
New Delhi:

டெல்லியில் பீட்சா டெலிவரி செய்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் பீட்சா டெலிவரி செய்த 70க்கு மேற்பட்ட குடும்பத்தினர் தற்போது கடும் அச்சத்தில் உள்ளனர்.  

டெல்லியின் ஹவுஸ்காஸ், மால்வியா நகர், சாவித்ரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் அந்த இளைஞர் கடந்த ஏப்.12ம் தேதி முதல் பீட்சா டெலிவரி செய்து வந்துள்ளார். கடந்த 15 நாட்களில் மட்டும், கிட்டதட்ட 72 வீடுகளுக்கு அவர் பீட்சா டெலிவரி செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. 

தொடர்ந்து, கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ள அந்த இளைஞர், தற்போது டெல்லி ஆர்எம்எல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவர் பீட்சா டெலிவிரி செய்த வீடுகளில் உள்ளவர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

தொடர்ந்து, அந்த இளைஞருடன் தொடர்பில் இருந்த 20க்கும் மேற்பட்ட டெலிவரி செய்யும் நபர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

பீட்சா டெலிவரி செய்த அந்த இளைஞருக்கு எந்த பயண பின்னணியும் இல்லை. அதனால், அவர் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு பீட்சா வழங்கும் போது அவருக்கும் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். 

இதுதொடர்பாக ஜொமேட்டோ நிறுவனம் வெளியிட்டு அறிக்கையில், மால்வியா நகரில் கடந்த சில நாட்களாக உணவு டெலிவிரி செய்து வந்த எங்களது ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. 

உணவு டெலிவரி செய்யும் சமயத்தில் தான் அந்த ஊழியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதா என்று எங்களுக்கு உறுதியாக தெரியவில்லை. தொடர்ந்து, அந்த பகுதியில் எங்களிடம் ஆர்டர் செய்த அனைத்து வாடிக்கையாளர்களையும் அரசு அதிகாரிகள் ஏற்கனவே தொடர்பு கொண்டுள்ளனர். அந்த ஊழியர் பணிபுரிந்து வந்த உணவுகமும் மூடப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு என்பது யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். அதனால், நாம் அனைவரும் நம்மை முழுமையாக தனிமைப்படுதிக்கொள்ளுவது என்பது முடியாதது, குறிப்பாக உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் இருந்து சில உதவிகள் நமக்கு கண்டிப்பாக தேவைப்படும். எங்களது ஊழியர்கள் யாரும் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது என்பதை தெரிந்துகொண்டு, பணியாற்றவில்லை என்று நாங்கள் நம்புகிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டெல்லியில் கொரோனா வைரஸால் இதுவரை 1,578 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 30 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 

.