This Article is From Apr 03, 2020

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடியின் வீடியோ செய்தி! - முக்கிய தகவல்கள்

கொரோனா தொடர்பாக நாட்டு மக்களுக்கு காலை 9 மணிக்கு வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடியின் வீடியோ செய்தி! - முக்கிய தகவல்கள்

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னர் முதன் முறையாக நாட்டு மக்களுக்கு வீடியோவாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஹைலைட்ஸ்

  • ஊரடங்கிற்கு பிறகு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடியின் வீடியோ செய்தி!
  • இந்தியாவின் ஊரடங்கு நடவடிக்கை உலகத்திற்கே முன்னுதாரணமாக மாறியுள்ளது.
  • இந்தியர்கள் நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம்.
New Delhi:

நம்மில் யாரும் தனியாக இல்லை என்பதை உணர்த்தவும், 130 கோடி இந்தியர்களின் பலத்தை உயர்த்தும் வகையிலும், ”ஏப்.5ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்களுக்கு மின் விளக்குகளை அனைத்து மெழுகுவர்த்தி ஏற்றுங்கள்” என பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

கடந்த 24ம் தேதி முதல் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னர், முதன் முறையாக நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று வீடியோ செய்தியை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் இதுவரை இரண்டு முறை உரையாற்றியுள்ளார். 

கொரோனா தொடர்பாக முதன்முறையாக நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, ஒரு நாள் மக்கள் சுய ஊரடங்கு இருக்கும்படி கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, மார்ச்.24ம் தேதி 2வது முறையாக நாட்டு மக்களிடம் உரையாற்றிய போது, கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு தழுவிய ஊரடங்கை அறிவித்தார். 

இதனிடையே, நேற்று கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் வீடியோ கான்பரன்சிங் முறையில் ஆலோசனை நடத்தினார். அதில், ஊரடங்கு முடிந்ததும் மக்கள் மீண்டும் பெரும் அளவில் ஒன்று கூடுவதை உறுதிசெய்ய ஒரு பொதுவான திட்டத்தை உருவாக்குவது முக்கியம் என்று வலியுறுத்தினார், இதுதொடர்பாக மாநிலங்களை பரிந்துரைகளுடன் வருமாறு வலியுறுத்தினார்.

இன்றைய பிரதமர் மோடியின் வீடியோ செய்தியில் சில முக்கிய தகவல்கள்: 

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 9 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இந்த நெருக்கடி நேரத்தில் நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்த விதம் பாராட்டத்தக்கது.

ஊரடங்கை கடைப்பிடித்து, வீட்டில் எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்தியர்கள் வெளிப்படுத்திய விதத்தை உலகமே கவனிக்கிறது. 

இந்தியாவின் ஊரடங்கு நடவடிக்கை உலகத்திற்கே முன்னுதாரணமாக மாறியுள்ளது.

நம்மில் யாரும் தனியாக இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்தியர்கள் நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம்.

இந்த நேரத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். இதனால், ஏழைகளும், தாழ்த்தப்பட்டவர்களும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை ஒழிக்கும் நடவடிக்கையில் நாடே ஒன்றுபட்டு இருளை விலக்கி, ஒளிமயமான காலத்தை கொண்டு வர வேண்டும்.

ஏப்.5ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று இரவு 9 மணி முதல் 9 நிமிடங்களுக்கு வீட்டில் மின் விளக்குகளை அனைத்து ஒவ்வொரு நபர்களும், தங்களது மொபைல் டார்ச்கள், அகல் விளக்குகள் அல்லது மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம், நம்மில் யாரும் தனியாக இல்லை என்பதை உணர்த்துவோம், 130 கோடி இந்தியர்களின் பலத்தை உயர்த்துவோம் என்று கூறியுள்ளார். 

இவை அனைத்திலும் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் வீடுகள் மற்றும் பால்கனியில் இருந்தே இதனை செய்ய வேண்டும். இந்த முயற்சியின் போது எந்த நேரத்திலும் நாம் தெருக்களுக்கு வெளியே வரக்கூடாது. சமூக விலகலை கடைப்பிடிப்பது என்பது மிக முக்கியமான விஷயம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

.