21 நாட்கள் ஊரடங்கு அடுத்தவாரம் செவ்வாயுடன் முடிவுக்கு வருகிறது.
ஹைலைட்ஸ்
- அனைத்து கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்
- ஏப்ரல் 14-ம்தேதியுடன் ஊரடங்கை நிறுத்துவது சாத்தியமல்ல என்று கூறியுள்ளார்
- கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது
New Delhi: ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 14-ம் தேதியுடன் திரும்பப் பெற்றுக் கொள்வது என்பது சாத்தியமாகாத விஷயம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். அனைத்து கட்சி தலைவர்கள் உடனான வீடியோ கான்பரன்சிங் சந்திப்பின்போது மோடி இவ்வாறு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், அடுத்த வாரம் செவ்வாயுடன் கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் ஊரடங்கு தளர்த்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை கவனத்தில் கொண்டு, ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என தெலங்கானா, அசாம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளன.
இந்த நிலையில், அனைத்துக் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங்கில் உரையாடினார். இந்த கூட்டத்தின்போது ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 14-ம்தேதியுடன் முடித்துக் கொள்வது என்பது சாத்தியமாகாத விஷயம் என்று அவர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 5,194 யை எட்டியுள்ள நிலையில், அனைத்துக் கட்சியுடனான கூட்டத்தை பிரதமர் மோடி நடத்தியுள்ளார். இந்த கூட்டத்தின்போது மத்திய சுகாதாரம், உள்துறை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலர்கள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.