Coronavirus: 5 முதல்வர்கள், மே 3 ஆம் தேதியோடு ஊரடங்கு முடிவுக்கு வர வேண்டும் எனவும்...
New Delhi: கொரோனா வைரஸ் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, இன்று பல்வேறு மாநில முதல்வர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, நாட்டில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மே 3 ஆம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கு உத்தரவு தொடர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார் எனத் தகவல் வந்துள்ளது.
மொத்தம் 9 முதல்வர்களுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் பிரதமர் மோடி. அதில் 5 முதல்வர்கள், மே 3 ஆம் தேதியோடு ஊரடங்கு முடிவுக்கு வர வேண்டும் எனவும் 4 பேர் அப்படி செய்யக் கூடாது என்றும் கூறியுள்ளதாக தெரிகிறது.
ஊரடங்கிலிருந்து ஒவ்வொரு மாநிலமும் எப்படி வெளியே வர வேண்டும் என்பது குறித்து இப்போதே திட்டமிட வேண்டும் என்று பிரதமர் மோடி, முதல்வர்களை வலியுறுத்தியதாக தகவல் சொல்லப்படுகிறது. இன்று பிகார், ஒடிசா, குஜராத், ஹரியானா, உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் மற்றும் புதுச்சேரி மாநில முதல்வர்கள் பிரதமர் மோடியுடன் பேசினார்கள். அதேபோல வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் மிசோரம் மாநில முதல்வர்கள், தங்களுடைய கருத்துகளை பிரதமரிடம் எடுத்து வைத்துள்ளனர்.
கேரள முதல்வர் பினராயி விஜயன், இந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தவிர்த்துவிட்டு, தனது மாநில தலைமைச் செயலாளரை பங்கேற்க வைத்துள்ளார்.
தற்போது மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்குக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து கடைசி நாளன்றுதான் முடிவெடுக்கப்படும். எந்தெந்த மாநிலங்களெல்லாம் கொரோனாவால் குறைவான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதோ, குறிப்பாக எந்தெந்த மாவட்டங்களெல்லாம் குறைவான பாதிப்படைந்துள்ளதோ அவற்றில் ஊரடங்கு தளர்த்தப்படும் என்று தெரிகிறது.
அதே நேரத்தில் பொதுப் போக்குவரத்து, பள்ளி, கல்லூரிகள், மத சம்பந்தமான கூட்டங்களுக்குத் தொடர்ந்து கட்டுப்பாடுகள் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
மாநில அரசுகள், மத்திய அரசிடமிருந்து பெரும் நிவாரணத் தொகையை எதிர்பார்ப்பதாக சொல்லப்படுகிறது.