இருமும்போது டிஸ்யூ பேப்பரை வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
New Delhi: கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து பரவி உலகை அச்சுறுத்தி வரும் நிலையில், அதன் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் 8 தடுப்பு நடவடிக்கைகளை வெளியிட்டுள்ளது.
கொரோனாவின் தாக்குதலுக்கு சீனாவில் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். டெல்லி, புனே, மும்பையில் இதன் அறிகுறிகளுடன் வருவோர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கேரளாவை பொறுத்தளவில் சுமார் 400 பேர் அவர்களது வீட்டிலேயே தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.
நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் சுமார் 30 ஆயிரம் பேரிடம் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதன் அறிகுறியுடன் டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள 8 வழிகளை தேசிய பேரிடர் மீட்பு ஆணையம் வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு-
1. அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சானிடைசர்சையும் உபயோகப்படுத்தலாம். குறிப்பாக இருமிய பிறகு, தும்மிய பிறகு, கழிவறைகளை உபயோகித்த பிறகு, சாப்பிடுவதற்கு முன் பின், நோயாளிகளை சந்திக்கும்போது, அவர்களது பொருட்களை பயன்படுத்தும்போது கைகளை கட்டாயம் கழுவ வேண்டும்.
2. முடிந்தவரை கண்களையும், மூக்கையும் கைகளால் நேரடியாக தொடுவதை தவிர்க்க வேண்டும்.
3. கூட்ட நெரில் நிறைந்த இடங்களில் மாஸ்க் அணிந்து கொண்டு செல்லலாம்.
4. மருத்துவர்கள் முடிந்த வரையில் நோயாளிகளையும், அவர்களது உடைமைகளையும் தொடுவதை தவிர்க்க வேண்டும்.
5. தும்மும்போது, இருமும்போது டிஸ்யூ பேப்பர்களை பயன்படுத்தி மூக்கையும், வாயையையும் மறைக்க வேண்டும். பின்னர் அந்த டிஸ்யூ பேப்பரை குப்பைத் தொட்டியில் போட வேண்டும். இதையடுத்து, கைகளை நன்றாக கழுவ வேண்டும். டிஸ்யூ பேப்பர் கிடைக்காவிட்டால் கைகளின் மேல் பக்கத்தை, அதாவது பின்னங்கைகளை கொண்டு மூக்கையும், வாயையையும் மறைத்து அதன் பின்னர் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.
6. பொதுவாகவே அதிகளவு சுகாதாரத்தை பின்பற்றி கொரோனா வைரசுக்கான எதிர்ப்பாற்றலை உருவாக்கலாம்.
7. காய்கறிகளையும், பழங்களையும் நன்றாக கழுவி சாப்பிட வேண்டும்.
8. ஆரேக்கியமான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி போன்ற சுகாதாரமான பழக்க வழக்கங்களை பின்பற்ற வேண்டும். குறிப்பாக நன்றாக உறங்க வேண்டும். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.