This Article is From May 02, 2020

அரபு நாடுகளின் விமர்சனத்தை தொடர்ந்து மறுக்கும் இந்தியா!

அரபு நாடுகளின் விமர்சனங்களைக் கடுமையாக மறுத்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, வளைகுடா நாடுகள் இந்தியாவுடனான உள்விவகாரங்களில் எவ்வித தலையீட்டையும் ஆதரிக்கவில்லை என கூறினார்.

அரபு நாடுகளின் விமர்சனத்தை தொடர்ந்து மறுக்கும் இந்தியா!

57 நாடுகளின் சக்திவாய்ந்த கூட்டணியான ஓ.ஐ.சி சமீபத்தில் இந்தியாவை "இஸ்லாமியப் போபியா" என்று குற்றம் சாட்டியது. (கோப்பு புகைப்படம்)

New Delhi:

சர்வதேச அளவில் ஏறத்தாழ 32 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில் இந்தியாவில் 33,500 க்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பரவலுக்கு இஸ்லாமியர்கள் காரணமாக்கப்பட்டுக் குறிவைக்கப்படுவதாக அரபு நாடுகளிலிருந்து சில முக்கிய புள்ளிகளின் கருத்துகள் ட்விட்ரில் வந்ததை இந்தியா, ‘பிரச்சாரம்' எனக் குறிப்பிட்டு, அவர்களின் கருத்தினை மறுத்துள்ளது.

அரபு நாடுகளின் விமர்சனங்களைக் கடுமையாக மறுத்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, வளைகுடா நாடுகள் இந்தியாவுடனான உள்விவகாரங்களில் எவ்வித தலையீட்டையும் ஆதரிக்கவில்லை என கூறினார்.

மேலும், இந்த நெருக்கடி காலகட்டங்களிலும், ரம்ஜானின்போது ஆழமாக வேரூன்றிய நட்பின் ஒரு பகுதியாக, வளைகுடா நாடுகளில் உள்ள இந்திய இஸ்லாமிய மக்களுக்கு  தடையின்றி உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கியதை மத்திய அரசு உறுதி செய்திருக்கிறது என்றார். பொருளாதார நிலைமையை பொருத்தமட்டில், கொரோனா தொற்றுக்கு பிந்தைய மீட்சி குறித்து வளைகுடா நாடுகள் இந்தியாவுடன் கலந்துரையாடல்களைக் கோருகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார். தற்போது நாம் பார்த்துக்கொண்டிருக்கும் ட்விட்டுகள் இந்தியா மற்றும் வளைகுடா நாடுகளுக்கிடையேயான உறவினை பாதித்துவிடாது. இந்த உறவின் உண்மையான நிலை மிகவும் வித்தியாசமானது எனக் கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலுக்கு இஸ்லாமியர்கள்தான் காரணம் என விமர்சிக்கப்பட்டதினால், அரபு நாடுகளின் முக்கிய பிரஜைகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனத்தினை பதிவு செய்திருந்தனர்.

57 நாடுகளின் கூட்டமைப்பான இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு(Organisation of Islamic Cooperation) இந்தியாவை  "இஸ்லாமோபோபியா" என விமர்சித்திருந்தது. இந்த விமர்சனத்தை இந்தியா மறுத்துள்ளது.

“அரபு நாடுகளில் உள்ள இந்திய இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் காலகட்டங்களில் தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை நாங்கள் உறுதி செய்திருக்கிறோம். இது மிகவும் பாராட்டத்தக்க ஒன்று. இந்த நாடுகள், மேற் குறிப்பிட்டதைப்போல கொரோனா தொற்றுக்கு பிறகான பொருளாதார மீட்சி குறித்து பேச்சுவார்த்தையை இந்தியாவுடன் தொடர விரும்புகின்றன.“ என ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார்.

மேலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் இந்த நாடுகளில் தொடர்ந்து தொடர்பில் உள்ளார்கள். தற்போது மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களில் மருத்துவ பொருட்கள் மற்றும் மருத்துவக் குழுக்கள் அனுப்பி வைப்பதற்கான கோரிக்கைகள் வந்துள்ளன. நாம் ஏற்கெனவே குவைத்தில் விரைவான மறுமொழி குழுவினை(Rapid Response Team) ஏற்படுத்தியுள்ளோம். வளைகுடா நாடுகள் இந்தியாவுடனான நட்பில் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் உள்ளது. அதே போல இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையீட்டினை அவர்கள் விரும்பவில்லை. எனவே எங்கள் நட்பு துல்லியமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களின் கருத்துப் பரிமாற்றங்கள் நம்பகத்தன்மையற்றவை என ஸ்ரீவஸ்தவா குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் வெளிநாட்டுப் பணியாளர்களுக்குப் பதில் தகுதியான உள்ளூர் பணியாளர்களை பணியமர்த்துவது குறித்த ஓமன் நிதியமைச்சகத்தின் அறிக்கை குறித்து ஸ்ரீவஸ்தவாவிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, “இந்த கொள்கை பல வருடங்கள் பழமையானது. இது இந்தியர்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. இந்த அறிக்கை இந்தியாவுக்கானது அல்ல.“ என அவர்  கூறியுள்ளார். மேலும், "அவர்கள் இந்தியாவுடனான உறவைப் பெரிதும் மதிக்கிறார்கள். கொரோனா வைரஸுக்கு இலவச பரிசோதனை, சிகிச்சை, உணவு வழங்குதல் என இந்தியர்களை ஓமன் அரசு சிறப்பாகக் கவனித்து வருகிறது" என்றும் ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார். இந்த நிலையில் ஓமன் அரசு இந்தியர்களின் சில வகை விசாக்களையும் விரிவுபடுத்தியுள்ளது.

.