This Article is From Mar 27, 2020

'மத்திய அரசு இப்போதுதான் சரியான பாதையில் முதல் அடியை எடுத்து வைத்துள்ளது!' - ராகுல் பாராட்டு

கொரோனாவுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிப்போம் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதற்கடுத்த சில மணி நேரங்களில் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

'மத்திய அரசு இப்போதுதான் சரியான பாதையில் முதல் அடியை எடுத்து வைத்துள்ளது!' - ராகுல் பாராட்டு

கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண நிதியாக ரூ. 1.70 லட்சம் கோடியை ஒதுக்கியுள்ளது மத்திய அரசு.

ஹைலைட்ஸ்

  • மருத்துவர்களுக்கு ரூ. 50 லட்சம் காப்பீட்டை மத்திய அரசு அளித்துள்ளது
  • கொரோனாவை எதிர்கொள்ள ரூ. 1.70 லட்சம் கோடியை ஒதுக்கியுளள்து மத்திய அரசு
  • மோடிக்கு சோனியா கடிதம் எழுதியுள்ள நிலையில், ராகுல் ட்வீட் செய்துள்ளார்
New Delhi:

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் துறையினர், ஏழை மக்களுக்கு நிவாரண அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ளார். இதனை பாராட்டியுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 'சரியான பாதையில் முதல் அடியை மத்திய அரசு இப்போதுதான் எடுத்து வைத்திருக்கிறது' என்று கூறியுள்ளார். 

கொரோனாவுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிப்போம் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதற்கடுத்த சில மணி நேரங்களில் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். 

ராகுல் தனது ட்விட்டர் பதிவில், 'மத்திய அரசு இன்று நிதியுதவி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது சரியான திசையில் மத்திய அரசு எடுத்து வைக்கும் முதல் அடி. ஊரடங்கு உத்தரவால் விவசாயிகள், தினக்கூலிகள், தொழிலாளர்கள், பெண்கள், வயது முதியோர் படும் சிரமங்களை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்' என்று கூறியுள்ளார். 

முன்னதாக கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண  நிதியாக ரூ. 1.70 லட்சம் கோடியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், 'ஏழைகள், தொழிலாளர்களுக்காக ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. யாரும் பட்டினியால் வாடக்கூடாது என்பதற்காக பல்வேறு பொருளாதார திட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளது. 

கொரோனாவுக்கு சிகிச்சை தரும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு ரூ.50 லட்சத்தில் மருத்துவ காப்பீடு.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு 5 கிலோ அரசி, 5 கிலோ கோதுமை இலவசமாக 3 மாத்துக்கு வழங்கப்படும். அதேபோல், அடுத்த மூன்று மாதத்திற்கு 1 கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்படும். 

வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள கிட்டத்தட்ட 8.3 கோடி குடும்பங்களுக்கு உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக சிலிண்டர் வழங்கப்படும்' என்பது உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார். 

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் ஒன்றை அனுப்பினால். அதில் அவர், 'காங்கிரஸ் தலைவர் என்கிற முறையில் மத்திய அரசு கொரோனாவை தடுப்பதற்காக மேற்கொண்டு வரும், அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டிருந்தார்.

.